ADDED : பிப் 26, 2024 03:22 AM
காசிமேடு : மீனவ சங்கங்களை ஒருங்கிணைந்து அரசியல் கட்சி துவங்குவது குறித்து ஆலோசனை கூட்டம், காசிமேட்டில் நேற்று நடந்தது.
அனைத்து மீனவர்கள் சங்க தலைவர் நாஞ்சில் ரவி தலைமையில் நடந்த கூட்டத்தில், பல்வேறு மீனவ சங்கங்களைச் சேர்ந்த பிரதிநிதிகள் பங்கேற்றனர்.
வல்லுனர் குழு
நாஞ்சில் ரவி கூறியதாவது:
மீனவர்கள் நலன் காக்கும் வகையில், புதிய அரசியல் கட்சி துவங்க உள்ளோம். மீனவர்கள் கட்சி துவங்க காரணமான அ.தி.மு.க., - தி.மு.க., கட்சிகளுக்கு நன்றி.
திருவள்ளூர், ஆரம்பாக்கம் துவங்கி கன்னியாகுமரி வரை, 610 மீனவ கிராமங்களைச் சேர்ந்த மீனவ சங்க பிரதிநிதிகளை ஒருங்கிணைந்து, ஒற்றை தலைமையில் கட்சிஉருவாக்கப்படும்.
தமிழகம் முழுதும் மீனவர்களுக்கு 12 சதவீதம் ஓட்டு வங்கி உள்ளது. அ.தி.மு.க.,வில் உள்ளது போன்ற சட்ட விதிகளைப் பின்பற்றி இந்த கட்சி அமைக்கப்படுகிறது.
பொது குழு உறுப்பினர்கள் வாயிலாகவே செயலர், பொருளாளர் மற்றும் கட்சி நிர்வாகிகள் நியமிக்கப்பட உள்ளனர். இதற்காக சட்ட வல்லுனர் குழுவும் அமைக்கப்பட்டுள்ளது.
வரும் 2026 சட்டசபை தேர்தலில் போட்டியிட உள்ளோம். அதற்குள் தேர்தல் கமிஷனில் கட்சி பதிவு செய்யப்படும்.
விறுவிறுப்பு
சென்னையில் விரைவில் மாபெரும் பொதுக்கூட்டம் நடத்தி கட்சி பெயர், சின்னத்தை அறிவிக்க உள்ளோம்.
வரும் 2026 சட்டசபை தேர்தலில், 50 தொகுதிகளில் வெற்றி பெறுவோம். 100 தொகுதிகளில், வெற்றியை நிர்ணயிக்கும் சக்தியாக உருவெடுப்போம். கட்சி துவக்கப் பணிக்காக அனைத்து மாவட்டங்களில் திண்ணை பிரசாரம் செய்யும் பணியும் விறுவிறுப்பாக நடக்கிறது.
இவ்வாறு அவர் கூறினார்.

