வெடி வைக்க துளையிட்ட போது விபரீதம்: 100 டன் பாறை சரிந்து ஐந்து பேர் பலி
வெடி வைக்க துளையிட்ட போது விபரீதம்: 100 டன் பாறை சரிந்து ஐந்து பேர் பலி
UPDATED : மே 21, 2025 08:37 AM
ADDED : மே 21, 2025 02:21 AM

சிங்கம்புணரி:சிங்கம்புணரி அருகே கிரஷர் குவாரியில், 100 டன் எடை கொண்ட பாறை உடைந்து விழுந்ததில், ஐந்து பேர் பரிதாபமாக பலியாகினர்.
சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரி அருகே மல்லாக்கோட்டையில் இருந்து 1 கி.மீ., துாரத்தில் மேகவர்மன் என்பவருக்கு சொந்தமான மேகா புளூமெட்டல்ஸ் கிரஷர், ஜல்லி தயாரிப்பு நிறுவனம் செயல்படுகிறது.
இதில், 50க்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணிபுரிகின்றனர். நேற்று காலை, 200 அடி பள்ளத்திற்குள் இறங்கி, சுற்றியுள்ள பாறையை உடைத்து, அதில் இருந்து ஜல்லி, கற்களை பிரித்தெடுக்கும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டிருந்தனர்.
பாறையை உடைக்க வெடி வைப்பதற்காக, பாறையை குடைந்து துளையிட்டுக் கொண்டிருந்தனர். மணல் அள்ளும் இயந்திர டிரைவரான ஒடிஷா மாநிலத்தை சேர்ந்த ஹர்ஜித், 28, பாறையில் துளை போடும் பணியில் ஈடுபட்டார்.
அப்போது பாறை உடைந்து அவர்கள் மீது விழுந்தது. இதில், ஹர்ஜித், முருகானந்தம், 49, ஆறுமுகம், 50, ஆண்டிச்சாமி, 50, கணேசன், 43, ஆகிய தொழிலாளர்கள் இடிபாடுகளுக்குள் சிக்கி சம்பவ இடத்திலேயே பலியாகினர். படுகாயமடைந்த மைக்கேல், 43, மதுரை தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
திருப்பத்துார் தீஅணைப்பு வீரர்கள், இறந்தவர்களின் உடல்களை மீட்டு, சிவகங்கை அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். பாறைக்குள் சிக்கிய ஹர்ஜித் உடலை, 20க்கும் மேற்பட்ட பாதுகாப்பு படை வீரர்கள், நவீன இயந்திரங்கள் உதவியுடன் முப்பது நிமிடங்களுக்கும் மேலாக போராடி மீட்டனர்.
அமைச்சர் பெரியகருப்பன், கலெக்டர் ஆஷா அஜித், சப்--கலெக்டர் ஆயுஷ் வெங்கட் வத்ஸ், எஸ்.பி., ஆஷிஷ் ராவத் ஆகியோர் சம்பவ இடத்தை பார்வையிட்டனர். விபத்து குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
உயிரிழந்த ஐந்து பேர் குடும்பத்திற்கு தலா, 4 லட்சம் ரூபாயும், காயமடைந்தவர் குடும்பத்திற்கு 1 லட்சம் ரூபாயும் நிவாரணம் வழங்க, முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.