தீவனங்கள் விலை கடும் உயர்வு கால்நடை வளர்ப்போர் கவலை
தீவனங்கள் விலை கடும் உயர்வு கால்நடை வளர்ப்போர் கவலை
UPDATED : அக் 31, 2026 07:41 PM
ADDED : அக் 31, 2026 07:37 PM
பல்லடம்: கால்நடை தீவனங்களின் விலை தொடர்ந்து உயர்ந்து வருவதால், கால்நடை விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
ஏர்முனை இளைஞர் அணியின், திருப்பூர் மாவட்ட துணைத் தலைவர் ஈஸ்வரமூர்த்தி கூறியதாவது:
விவசாயத்துடன் கூடுதல் வருவாய் கிடைக்கும் என்ற நம்பிக்கையில், கால்நடை வளர்ப்பில் பலரும் ஈடுபடுகின்றனர். சமீபகாலமாக தீவனங்களின் விலை தொடர்ந்து உயர்ந்து வருவதால், கால்நடை வளர்ப்பை தொடர்வது சவாலாக மாறியுள்ளது.
ஒரு கிலோ நெல் தவிடு, 1,000 ரூபாயில் இருந்து, 1,200 ரூபாய்க்கு மேல் உயர்ந்துள்ளது. ஒரு வைக்கோல் கட்டு, 220ல் இருந்து, 380 ரூபாயாகவும், ‘சைலேஜ்’ எனப்படும் பசுந்தீவனம், 450ல் இருந்து, 600 ரூபாயாகவும் அதிகரித்துள்ளது. கலப்புத் தீவனம், மக்காச்சோள மாவின் விலையும் உயர்ந்துள்ளது.
பால் கொள்முதல் விலை சமீபத்தில் தான் லிட்டருக்கு, 35ல் இருந்து, 42 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. தீவனங்களின் விலை உயர்வுடன் ஒப்பிடும்போது, இந்த உயர்வு போதுமானதாக இல்லை. இதே நிலை நீடித்தால், பால் உற்பத்தியை தொடர முடியாத நிலை ஏற்படும்.
தீவன விலை உயர்வைக் கட்டுப்படுத்த வேண்டும் அல்லது கால்நடை தீவனங்களை, மானிய விலையில் வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு, அவர் கூறினார்.
