ADDED : பிப் 05, 2025 01:49 AM

சென்னை:சென்னையில் நேற்று காலை பனிமூட்டம் அதிகம் இருந்ததால், விமானங்கள் தரை இறங்க முடியாமல், திருப்பி விடப்பட்டன. சென்னையில் இருந்து செல்ல வேண்டிய விமானங்கள் தாமதமாக புறப்பட்டு சென்றன. ரயில்கள் மற்றும் பிற வாகனங்கள் மெதுவாக இயக்கப்பட்டன.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில், நேற்று அதிகாலை கடும் பனிமூட்டம் நிலவியது. இதனால் வெளியூர்களில் இருந்து, சென்னை விமான நிலையம் வந்த விமானங்கள், தரை இறங்க முடியாமல், வேறு ஊர்களுக்கு திருப்பி விடப்பட்டன.
லண்டனில் இருந்து, 315 பயணியருடன், சென்னை வந்த பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமானம், மஸ்கட்டில் இருந்து சென்னை வந்த ஓமன் ஏர்லைன்ஸ் விமானம் பெங்களூருக்கும், ஹைதராபாத் மற்றும் புனேவில் இருந்து சென்னை வந்த இண்டிகோ விமானங்கள், திருவனந்தபுரத்திற்கும் திருப்பி விடப்பட்டன.
குவைத்தில் இருந்து சென்னை வந்த, ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம், தரையிறங்க முடியாமல் தொடர்ந்து, சில நிமிடங்கள் வானில் வட்டமடித்தது.
சிறிது நேரத்திற்கு பிறகு தரை இறங்கியது. மேலும் ஐந்துக்கும் மேற்பட்ட விமானங்கள், திருப்பி விடப்பட்டன.
சென்னை விமான நிலையத்தில் இருந்து, டில்லி, மதுரை, கோவை, துாத்துக்குடி, விஜயவாடா, அந்தமான், லண்டன், சிங்கப்பூர் போன்ற ஊர்களுக்கு செல்லும், 15 விமானங்கள் தாமதமாக புறப்பட்டு சென்றன. இதனால் பயணியர் கடும் பாதிப்புக்கு உள்ளாகினர்.
இதேபோல் பனிமூட்டம் காரணமாக, தென் மாவட்டங்கள் உட்பட பிற ஊர்களில் இருந்து, சென்னை வந்த ரயில்களும், தாமதமாக வந்தன. வாகன ஓட்டிகள் முகப்பு விளக்குகளை ஒளிர விட்டபடி, சாலைகளில் மெதுவாக சென்றனர்.