போலீசில் 'ஆர்டர்லி' முறையை பின்பற்றுவது குற்றம்: ஐகோர்ட்
போலீசில் 'ஆர்டர்லி' முறையை பின்பற்றுவது குற்றம்: ஐகோர்ட்
ADDED : டிச 19, 2025 06:00 AM

சென்னை : ஐ.ஏ.எஸ்., - ஐ.பி.எஸ்., அதிகாரிகள் வீடுகளில், அரசு ஊழியர்களும், போலீசாரும் வேலையாட்களாக நியமிக்கப்படும், 'ஆர்டர்லி' முறையை முற்றிலுமாக ஒழிக்க வேண்டும் என, 2022ம் ஆண்டு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இது முழுமையாக பின்பற்றப்பட்டதா என, நீதிபதிகள் எஸ்.எம்.சுப்ரமணியம், சி.குமரப்பன் அடங்கிய அமர்வு கேள்வி எழுப்பியது.
இந்த வழக்கு, நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழக அரசின் தலைமை குற்றவியல் வழக்கறிஞர் அசன் முகமது ஜின்னா ஆஜராகி, டி.ஜி.பி.,யின் அறிக்கையை தாக்கல் செய்தார். மேலும், தங்கள் இல்லங்களில், ஆர்டர்லிகளாக யாரும் பணியாற்றவில்லை என, தற்போது பதவியில் இருக்கும் உயர் அதிகாரிகளும், ஓய்வுபெற்ற உயர் அதிகாரிகளும் தெரிவித்து உள்ளதாக குறிப்பிட்டார்.
அப்போது நீதிபதிகள், 'ஒரு ஆர்டர்லி கூட பணியில் இல்லையா' என, கேள்வி எழுப்பினர். அதற்கு, ''தற்போது ஒருவர் கூட இல்லை; அவ்வாறு இருப்பதாக புகார் வந்தால், உடனே நடவடிக்கை எடுக்கப்படும்,'' என, அசன் முகமது ஜின்னா பதிலளித்தார்.
இதையடுத்து நீதிபதிகள், 'சிறைத் துறையில் ஆர்டர்லி முறை ஒழிக்கப்பட்டதைப் போல, சட்டம் -- ஒழுங்கு காவல் பிரிவிலும் ஒழிக்கப்பட வேண்டும். ஆர்டர்லி முறையை பின்பற்றுவது குற்றம். பணியில் இருப்பதாக கூறிவிட்டு, அதிகாரி வீட்டு வேலைகளில் ஈடுபடும் காவலர்களை கண்காணிக்கும் நடைமுறைகள் குறித்து, இன்று தகவல் தெரிவிக்க வேண்டும்' என உத்தர விட்டனர்.

