திமுக அரசை பொறுத்தவரை ஊழல் செய்வதுதான் முதல் பணி: இபிஎஸ்
திமுக அரசை பொறுத்தவரை ஊழல் செய்வதுதான் முதல் பணி: இபிஎஸ்
ADDED : செப் 09, 2025 10:01 PM

தொண்டாமுத்தூர்: ''திமுக அரசைப் பொறுத்தவரை ஊழல் செய்வதுதான் முதல் பணி,'' என அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ் குற்றம்சாட்டி உள்ளார்.
'மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம்' சுற்றுப்பயணத்தில் தொண்டாமுத்தூரில் அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ் பேசியதாவது: 200 இடங்களில் திமுக வெல்லும் என்று ஸ்டாலின் பகல் கனவு காண்கிறார். வலுவான கூட்டணி என்று சொல்கிறார். உங்கள் கூட்டணி பலமாக இருக்கலாம், ஆனால் அதிமுக கூட்டணி மக்கள் பலம் பொருந்தியது. அதிமுக, பாஜக கூட்டணி அமைத்ததுமே ஸ்டாலின் புலம்ப ஆரம்பித்துவிட்டார். அதிமுக பாஜக கூட்டணி அமைந்தவுடன் ஸ்டாலினுக்குப் பயம் வந்துவிட்டது. தோல்வியின் பயத்தைப் பார்க்கிறோம். மத்தியில் சிறப்பாக ஆட்சி செய்து மூன்றாவது முறையாக பாஜ ஆட்சியில் அம்ர்ந்திருக்கிறது.
மீண்டும் அதிமுக ஆட்சி அமைந்ததும் தடையின்றி வண்டல் மண் அள்ளிக்கொள்ளலாம். இன்று ஒரு லோடு மண் ஆயிரம் ரூபாய்க்கு விற்கிறார்கள். திமுக அரசைப் பொறுத்தவரை ஊழல் செய்வதுதான் முதல் பணி. கருணாநிதி காலத்தில் இருந்து இன்றுவரை அது ஊழலின் ஊற்றுக்கண். எல்லா துறைகளிலும் ஊழல். எந்த அதிகாரியை சந்தித்தாலும் மேலிடத்துக்கு கொடுக்கணும், கொடுத்தால்தான் பரிசீலிக்கப்படும் என்கிறார்கள்.
மா.சுப்ரமணியம், உங்கள் துறையில் நிறைய தவறுகள் நடக்கின்றன. பணம், நகை திருடுவார்கள், எங்கேயாவது கிட்னி திருடுவார்களா? மருத்துவமனையில் ஆய்வுசெய்தபோது, கிட்னி மாற்று அறுவை செய்வதில் முறைகேடு நடைபெற்றதாக கண்டுபிடிக்கப்பட்டு, உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைக்கு அனுமதி நிறுத்தியுள்ளனர். ஆனால், இதுவரை கைது செய்யவில்லை, ஏனெனில் அதை திமுக எம்.எல்.ஏ. செய்திருக்கிறார். கிட்னி திருட்டை முதலில் கண்டுபிடியுங்கள். யாரும் திமுகவினர் மருத்துவமனைக்குப் போய்விடாதீர்கள், அப்படியே போனாலும் நம் உடலில் உறுப்புகள் பத்திரமாக இருக்கிறதா என்று ஸ்கேன் செய்து பார்த்துக்கொள்ளுங்கள். திமுக ஆட்சியில் எல்லாவற்றையும் திருடிவிட்டார்கள், இனி திருடுவதற்கு எதுவுமே இல்லை என்பதால் மக்களின் உடல் உறுப்பை திருட ஆரம்பித்து விட்டார்கள். இதற்கு நீதிமன்றம் பிடிபிடியென பிடித்துள்ளது, பதில் சொல்லியே ஆக வேண்டும்.
நாங்கள் எல்லோரும் இன்றுவரை விவசாயம்தான் செய்கிறோம். வலிமையான கூட்டணி அமைத்ததால் அவதூறு பிரசாரம் பரப்பிவருகிறார்கள். டிவி, பத்திரிகைகள் வைத்துக்கொண்டு அவதூறு பரப்புகிறார்கள். ஒரு மகிழ்ச்சியான செய்தி, தமிழகத்தைச் சேர்ந்த முன்னாள் எம்பியும் மஹாராஷ்டிரா கவர்னராகவும் இருந்த சி.பி.ராதாகிருஷ்ணன் துணை ஜனாதிபதி பதவிக்குப் போட்டியிட்டு வெற்றி பெற்றுவிட்டார். இது தமிழகத்துக்கு கிடைத்த பெருமை. கொங்கு மண்டலத்தைச் சேர்ந்த ஒருவருக்கு மிகப்பெரிய பொறுப்பு கிடைத்திருக்கிறது. இவ்வாறு இபிஎஸ் பேசினார்.

