நீலகிரி வரையாடுகளுக்கு நாடாப்புழு தொற்று; கண்காணித்து தடுக்க வனத்துறை முயற்சி
நீலகிரி வரையாடுகளுக்கு நாடாப்புழு தொற்று; கண்காணித்து தடுக்க வனத்துறை முயற்சி
UPDATED : ஏப் 03, 2025 06:32 AM
ADDED : ஏப் 03, 2025 01:24 AM

சென்னை:நீலகிரி வரையாடுகளுக்கு, மாமிச நாடாப்புழு தொற்று காரணமாக ஏற்பட்டுள்ள பாதிப்புகளை, கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலை கழக வல்லுநர்கள் உதவியுடன் கண்காணிக்க, வனத்துறை நடவடிக்கை எடுத்துள்ளது.
தமிழகத்தின் மாநில விலங்காக, நீலகிரி வரையாடுகள் உள்ளன. அழிந்து வரும் நீலகிரி வரையாடுகளை பாதுகாப்பதற்கான சிறப்பு திட்டம், 2023 அக்டோபர் 12ல் துவக்கப்பட்டது.
கணக்கெடுப்பு
இத்திட்டத்தின் கீழ், நீலகிரி வரையாடுகள் பாதுகாப்புக்காக, 25 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டது. இந்நிதியில், முதல் பணியாக,தமிழக - கேரள வனத்துறையினர் கூட்டாக, நீலகிரி வரையாடுகள் குறித்த கணக்கெடுப்பு நடத்தினர்.
இதில், தமிழகத்தில் 1,031 வரையாடுகள் இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதற்கான வாழ்விட பாதுகாப்புக்கு, நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
கடந்த ஆண்டு, கோவை மாவட்டம் ஆனைமலை புலிகள் காப்பகம்; நீலகிரி மாவட்டம் முக்கூர்த்தி தேசிய பூங்கா ஆகிய இடங்களில், தலா ஒரு நீலகிரி வரையாட்டுக்கு, 'ரேடியோ காலர்' கண்காணிப்பு கருவி பொருத்தப்பட்டது.
இதில், ஒரு வரையாடு இறந்த நிலையில், மற்ற வரையாடுகளுக்கு, 'ரேடியோ காலர்' கருவிகள் பொருத்தும் பணி நிறுத்தப்பட்டது. சமீபத்தில், நீலகிரி வரையாடுகளின், உடல் நிலை ஆய்வு செய்யப்பட்டது.
நடவடிக்கை
அப்போது, நீலகிரி வரையாடுகளின் உடலில், ஒருவித நீர்க்கட்டிகள் ஏற்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
இது குறித்து வனத்துறை உயர் அதிகாரி ஒருவர் கூறியதாவது:
நீர்க்கட்டிகள் குறித்து ஆய்வு செய்ததில், மாமிச நாடாப்புழு தொற்று காரணமாக ஏற்படும், 'கோனுாரஸ்' நீர்க்கட்டிகள் என்பது தெரிய வந்து உள்ளது.
இதன் காரணமாக, தமிழக கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலையுடன், நீலகிரி வரையாடுகளை தொடர்ந்து கண்காணிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஆய்வு முடிவுகள் அடிப்படையில், நோய் தொற்று தடுப்பு நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.