ADDED : மார் 11, 2024 04:46 AM
சென்னை : நீலகிரி, கன்னியாகுமரி, கிருஷ்ணகிரி, வேலுார் ஆகிய நான்கு மாவட்டங்களில் நேற்று, 20 இடங்களில் காட்டுத் தீ ஏற்பட்டதாக வனத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
தமிழகத்தில் கடந்த சில வாரங்களாக பல்வேறு வனப்பகுதிகளில் தீ விபத்துகள் அதிகரித்து உள்ளன.
வன உயிரின காப்பகங்கள், புலிகள் காப்பகங்களில் வனத்துறையினர் கண்காணிப்பை தீவிரப்படுத்தி உள்ளனர்.
இருப்பினும், நெடுஞ்சாலையை ஒட்டிய வனப்பகுதிகளில், திடீர் தீ விபத்துகள் அதிகரிக்கின்றன. இது குறித்து, இந்திய வன ஆராய்ச்சி நிறுவனம் செயற்கைக்கோள் வாயிலாக கண்காணித்து, விபரங்களை அளித்து வருகிறது.
இவ்வகையில், கிருஷ்ணகிரி மாவட்டத்துக்கு உட்பட்ட வனப்பகுதிகளில், 10 இடங்கள்; வேலுாரில், எட்டு இடங்கள்; நீலகிரி, கன்னியாகுமரி மாவட்டங்களில் தலா ஒரு இடம் என, மொத்தம் 20 இடங்களில் நேற்று காட்டுத்தீ ஏற்பட்டது.
சம்பந்தப்பட்ட மாவட்டங்களில் உயர் அதிகாரிகள் வாயிலாக, தீயணைப்பு பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளதாக வனத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

