தன்னை மறந்து; பதவியை மறந்து ஸ்டாலின் பேசுகிறார்: பழனிசாமி
தன்னை மறந்து; பதவியை மறந்து ஸ்டாலின் பேசுகிறார்: பழனிசாமி
ADDED : நவ 14, 2024 04:51 AM

கோவை : ''அ.தி.மு.க., ஆட்சியில் நிறைவேற்றப்பட்ட திட்டங்களைத்தான் 'ஸ்டிக்கர்' ஒட்டி திறந்து வைத்து வருகிறார் முதல்வர் ஸ்டாலின்,'' என எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி தெரிவித்தார்.
கோவை விமான நிலையத்தில் அவர் அளித்த பேட்டி:
'எதிர்க்கட்சிக் தலைவர் பழனிசாமி என்னை பற்றி விமர்சனம் செய்கிறார்' என்று தொண்டர்களுக்கு கடிதம் எழுதி இருக்கிறார் முதல்வர் ஸ்டாலின்.
கரப்பான் பூச்சி போல
அதில், என்னை தனிப்பட்ட முறையில் விமர்சனம் செய்திருக்கிறார். ஒரு எதிர்க்கட்சி தலைவரைப் பார்த்து ஊர்ந்து சென்றார்; தவழ்ந்து சென்றார்; கரப்பான் பூச்சி போல பறந்து சென்றார் என்றெல்லாம் பேசுகிறார்.
தன்னை மறந்து, தன் பதவியை மறந்து பேசுகிறார் ஸ்டாலின்.
அ.தி.மு.க., ஆட்சியில் கொண்டுவரப்பட்ட திட்டங்களைத்தான் முதல்வர், 'ஸ்டிக்கர்' ஒட்டி திறந்து வைத்து வருகிறார். புதியதாக திட்டங்களை அறிவித்தாலும், அதை நிறைவேற்றுவதில்லை.
கோவையில் அவிநாசி ரோடு மேம்பாலம், மேற்கு புறவழிச் சாலை, போத்தனுார் பஸ் ஸ்டாண்ட், பில்லுார் மூன்றாவது கூட்டுக் குடிநீர் திட்டம், உக்கடம் மேம்பாலம், தகவல் தொழில்நுட்பப் பூங்கா, அத்திக்கடவு - அவிநாசி திட்டம் போன்றவை அ.தி.மு.க., ஆட்சியில் கொண்டு வரப்பட்டவை.
இந்தப் பணிகள் முழுமையாக முடியவில்லை. ஆமை வேகத்தில் நடந்து வருகின்றன. பல பணிகள் நிறைவு பெறாமல், நிறுத்தப்பட்டு விட்டன. அப்படியே கிடப்பில் போட்டு வைத்துள்ளனர்.
கோவை மெட்ரோ ரயில் திட்டம், வெள்ளலுார் பஸ் ஸ்டாண்ட், மேற்கு புறவழிச் சாலை, விமான நிலைய விரிவாக்கத் திட்டம் போன்றவை, இதுவரை நிறைவேற்றப்படவில்லை. தி.மு.க., அரசு எந்த திட்டத்தை அறிவித்தாலும் நிறைவேற்றுவதில்லை.
திட்டங்களை அறிவிக்காமல் எதற்காக ஆய்வுப்பணி செய்கிறார் எனத் தெரியவில்லை. அ.தி.மு.க., ஆட்சியில் ஏற்கனவே அறிவித்த திட்டங்களை முடிவு செய்து திறந்து வைக்கிறார்.
தேர்தல் சமயத்தில் அறிவித்த அரசு ஊழியர்களுக்கான திட்டங்களை நிறைவேற்றுவதுதான் ஆட்சிக்கு அழகு. எந்த வாக்குறுதிகளையும் நிறைவேற்றாமல், வெறும் வார்த்தைகளாலேயே காலம் ஓட்டுவதால், மக்களுக்கு எந்த பிரயோஜனமும் இல்லை.
பொம்மை முதல்வர்
கோவையில் வீட்டு வசதி வாரியம், 3,000 ஏக்கர் நிலங்களை கையகப்படுத்தியது. நீதிமன்ற ஆணையின்படி நிறைவேற்றப்பட்ட நிலங்களை மட்டுமே ஒப்படைத்துள்ளது.
தமிழகத்தில் சட்டம் - ஒழுங்கு அடியோடு சீர்குலைந்து விட்டது. பொம்மை முதல்வர் ஆட்சியில் மக்களின் புகார்களுக்கு போலீசில் மதிப்பில்லை. காவல் துறைக்கு முழு சுதந்திரம் இல்லை. போதைப்பொருள் இங்கேயே தயாரிக்கின்றனர்.
பா.ஜ.,வுடன் உறுதியாக கூட்டணி கிடையாது; தமிழகத்தில் இருந்து தி.மு.க., அகற்றப்பட வேண்டும் என்பதுதான் எங்களது நோக்கம். இதில் தெளிவாக உள்ளோம்.
இவ்வாறு அவர் கூறினார்.