'மாஜி' மாவட்ட வருவாய் அதிகாரிக்கு லஞ்ச வழக்கில் 5 ஆண்டு கடுங்காவல்
'மாஜி' மாவட்ட வருவாய் அதிகாரிக்கு லஞ்ச வழக்கில் 5 ஆண்டு கடுங்காவல்
ADDED : மார் 16, 2025 07:22 AM

சென்னை: நிலத்தின் வழிகாட்டி மதிப்பை குறைத்து காட்ட, 60,000 ரூபாய் லஞ்சம் பெற்ற வழக்கில், முன்னாள் மாவட்ட வருவாய் அதிகாரிக்கு, ஐந்து ஆண்டு கடுங்காவல் சிறை தண்டனை விதித்து, சென்னை சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
சென்னை போரூர் சபரி நகரைச் சேர்ந்தவர் சந்திரபாபு. இவர், தன் மனைவி பகுத்தறிவு பெயரில், காஞ்சிபுரம் பனங்காட்டூர் கிராமத்தில், 20.46 லட்சம் ரூபாய் மதிப்பில், 66 சென்ட் விவசாய நிலம் வாங்கினார்.
புகார்
இந்த நிலத்தை, செங்கல்பட்டு சார் - பதிவாளர் பதிவு செய்துள்ளார். நிலத்துக்கு வழிகாட்டி மதிப்புக்கு ஏற்ப முத்திரை தீர்வை நிர்ணயிக்க, சென்னை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில், 2013 ஆக., 22 முதல் 2014 ஜூலை 11 வரை, முத்திரை தீர்வை பிரிவு மாவட்ட வருவாய் அதிகாரியாக பணிபுரிந்த மோகனசுந்தரம், 58, என்பவருக்கு ஆவணங்கள் அனுப்பி வைக்கப்பட்டன.
விவசாய நிலத்திற்கான வழிகாட்டி மதிப்பை சதுர அடிக்கு 400 ரூபாயில் இருந்து, 230 ரூபாயாக குறைப்பதற்கு, தனக்கு லஞ்சமாக, 75,000 ரூபாய் கொடுக்க வேண்டும் என, மோகனசுந்தரம் கேட்டுள்ளார். பின், 60,000 ரூபாயாக குறைத்துள்ளார். இது குறித்து, சென்னை லஞ்ச ஒழிப்பு போலீசில், சந்திரபாபு புகார் அளித்தார்.
போலீசாரின் அறிவுரைப்படி, 2014 ஜூலை 17ல் லஞ்ச பணத்தை சந்திரபாபு கொடுத்த போது, மோகனசுந்தரம் மற்றும் அவரிடம் உதவியாளராக பணிபுரிந்த ரேவதி, 43, ஆகியோரை கைது செய்தனர். பின், மோகனசுந்தரம், 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டார். இந்த வழக்கு விசாரணை, சென்னையில் உள்ள லஞ்ச வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்ற நீதிபதி எஸ்.பிரியா முன் நடந்தது.
போலீசார் தரப்பில், அரசு சிறப்பு வழக்கறிஞர் உஷாராணி ஆஜரானார். வழக்கை விசாரித்த நீதிபதி பிறப்பித்த உத்தரவு: லஞ்ச பணத்தை பெறுவதற்கு, ரேவதி என்பவரை உரிய அனுமதியின்றி மாதம் 10,000 ரூபாய் ஊதியத்தில் மோகனசுந்தரம் நியமித்துள்ளார்.
நடவடிக்கை
மோகனசுந்தரம் மீதான குற்றச்சாட்டுகள் சந்தேகத்துக்கு இடமின்றி, அரசு தரப்பால் நிரூபிக்கப்பட்டுள்ளன. எனவே, அவருக்கு ஐந்தாண்டு கடுங்காவல் சிறை தண்டனையும், 1 லட்சம் ரூபாய் அபராதமும் விதிக்கப்படுகிறது. வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட ரேவதி என்பவருக்கு, நான்கு ஆண்டு கடுங்காவல் சிறை தண்டனையும், 50,000 ரூபாய் அபராதமும் விதிக்கப்படுகிறது.
வழக்கு விசாரணையின் போது, குற்றஞ்சாட்டப்பட்ட நபர்களை காப்பாற்றும் நோக்கில், புகார்தாரர் சந்திரபாபு பொய் சாட்சியம் அளித்துள்ளார். எனவே, பொய் சாட்சியம் அளித்த குற்றத்துக்காக, அவருக்கு எதிராக சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு உத்தரவில் கூறப்பட்டுள்ளது.