தி.மு.க., அரசு தோல்வியடைந்து விட்டது முன்னாள் அமைச்சர் காமராஜ் குற்றச்சாட்டு
தி.மு.க., அரசு தோல்வியடைந்து விட்டது முன்னாள் அமைச்சர் காமராஜ் குற்றச்சாட்டு
ADDED : அக் 24, 2025 12:19 AM
சென்னை: ''நெல் கொள்முதல் செய்ய முடியாததற்கு, திறந்தவெளி கிடங்குகளை அகற்றியதே காரணம்,'' என, உணவுத்துறை முன்னாள் அமைச்சர் காமராஜ் குற்றஞ்சாட்டினார்.
அவரது பேட்டி:
டெல்டா மாவட்ட சாலைகள் அனைத்திலும், நெல் மூட்டைகள் குவிந்து கிடக்கின்றன; அவை முளைத்து விட்டன. இதனால், விவசாயிகள் நெல் மூட்டைகளை கட்டிப் பிடித்து கதறி அழுகின்றனர்.
ஆனால், 'தினமும் 2,000 மூட்டைகள் கொள்முதல் செய்யப்படுகின்றன. செறிவூட்டப்பட்ட அரிசிக்கு மத்திய அரசு அனுமதிக்கவில்லை. 22 சதவீத ஈரப்பதம் உள்ள நெல்லை கொள்முதல் செய்ய மத்திய அரசிடம் இருந்து அனுமதி கிடைக்கவில்லை' என்று, உணவு அமைச்சர் சக்கரபாணி கூறியுள்ளார்.
செறிவூட்டப்பட்ட அரிசிக்கு, கடந்த ஆகஸ்ட் 18ம் தேதியே மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. ஆனால், உணவு அமைச் சர், 'இன்னும் அனுமதி கிடைக்க வில்லை' என்று, கூசாமல் பொய் சொல்கிறார்.
தினமும், 800 முதல், 900 மூட்டைகள் வரை, நெல் கொள்முதல் செய்யப்படுகிறது. ஆனால், 2,000 மூட்டைகள் என, அமைச்சர் தவறான தகவலை சொல்கிறார். பல கொள்முதல் நிலையங்களில், நெல் கொள்முதல் நடக்கவில்லை.
இன்னும், 30 லட்சத்திற்கும் அதிகமான நெல் மூட்டைகள் கொள்முதல் செய்யப்படாமல் தேங்கியுள்ளன. ஒவ்வொரு கொள்முதல் நிலையத்திலும், 10,000 மூட்டைகள் வரை கிடங்குகளுக்கு அனுப்பப்படாமல் உள்ளன.
ஒரு லட்சம் ஏக்கருக்கும் அதிகமான நிலத்தில், அறுவடை செய்யாமல் நெல் மணிகள் முளைத்து உள்ளன. டெல்டாவில் கொள்முதல் செய்யப்படும் நெல்லை சேமிக்க, டெல்டா மாவட்டங்களில் கிடங்குகள் அமைப்பது சாத்தியம் அல்ல. கிடங்கு கள் தமிழகம் முழுதும் அமைக்க வேண்டும்.
அதனால் தான் திறந்தவெளி சேமிப்பு கிடங்குகள், அதிக அளவில் அமைக்கப்பட்டன. தி.மு.க., ஆட்சியில், திறந்தவெளி சேமிப்பு கிடங்குகள் அகற்றப்பட்டன.
அங்கு பணியாற்றிய சுமை துாக்கும் தொழிலாளர்கள், வேறு வேலைக்கு சென்று விட்டனர். இதுவே, நெல் கொள்முதல் செய்ய முடியாத நிலைக்கு காரணம். நெல் கொள்முதலில் தி.மு.க., அரசு தோல்வி அடைந்து விட்டது.
மத்திய அரசிடம் அனுமதி பெற்று, 22 சதவீதம் ஈரப்பதம் உள்ள நெல்லை உடனடியாக கொள்முதல் செய்ய வேண்டும். மத்திய அரசின் சேமிப்பு கிடங்குகளை பயன்படுத்தியும், தற்காலிக சேமிப்பு கிடங்குகள் அமைத்தும், நெல் கொள்முதலை வேகப்படுத்த வேண்டும்.
எதிர்க்கட்சி தலைவர் பழனிசாமி நேரடியாக களத்திற்கு சென்று, விவசாயிகளை சந்தித்தார். அவர்களின் குறைகளை கேட்டறிந்தார். இதை தி.மு.க.,வால் ஜீரணிக்க முடியவில்லை.
இவ்வாறு காமராஜ் கூறினார்.

