சொத்து விபரங்களை மறைத்ததாக வழக்கு: 'மாஜி' அமைச்சரின் அப்பீல் மனு 'டிஸ்மிஸ்'
சொத்து விபரங்களை மறைத்ததாக வழக்கு: 'மாஜி' அமைச்சரின் அப்பீல் மனு 'டிஸ்மிஸ்'
ADDED : நவ 16, 2025 01:39 AM
தேர்தல் வேட்பு மனுவில் சொத்து விபரங்களை மறைத்ததாக தொடரப்பட்ட வழக்கில், அ.தி.மு.க.,வை சேர்ந்த முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணியின் மேல்முறையீட்டு மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
கடந்த, 2021ல் நடந்த தமிழக சட்டசபை தேர்தலில், அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணி, ஜோலார்பேட்டை தொகுதியில் போட்டியிட்டார்.
அவர் தனது வேட்பு மனுவில், சொத்து விபரங்களை குறைத்து, தவறான தகவல்களை தெரிவித்ததாக, வேலுாரை சேர்ந்த ராமமூர்த்தி என்பவர் புகார் அளித்தார்.
இந்த புகாரின் அடிப்படையில், திருப்பத்துார் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில், கே.சி.வீரமணிக்கு எதிராக தேர்தல் கமிஷன் வழக்கு தொடர்ந்தது.
இந்த வழக்கை ரத்து செய்யக்கோரி வீரமணி தாக்கல் செய்த மனுவை, சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
அதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். இந்த மேல்முறையீட்டு மனு, நீதிபதிகள் தீபங்கர் தத்தா மற்றும் ஜார்ஜ் மாஷி அமர்வில் நேற்று முன்தினம் விசாரணைக்கு வந்தது.
அப்போது, வீரமணி சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் நந்தகுமார், ''என் கட்சிக்காரருக்கு எதிரான குற்றச்சாட்டுகள், கிரிமினல் வழக்குடன் தொடர்புடையவை கிடையாது. எனவே, விசாரணைக்கு தடை விதிக்க வேண்டும்,'' என, வாதிட்டார்.
உடன் நீதிபதிகள், 'இந்த விவகாரத்தை பொறுத்தவரை, நீங்கள் குற்றவாளி என அறிவிக்கப்படவில்லை.
'அப்படி இருக்கையில், வழக்கை கண்டு ஏன் அஞ்சுகிறீர்கள்? வழக்கை சந்தியுங்கள். உங்களுக்கு எதிராக உத்தரவு பிறப்பிக்கப்பட்டால், சட்டப்படி மேல் முறையீடு செய்யுங்கள்' என்றனர்.
இதையடுத்து பேசிய வழக்கறிஞர் நந்தகுமார், ''அடுத்த ஆண்டு தமிழகத்தில் சட்டசபை தேர்தல் நடக்கவுள்ளது. அப்படி இருக்கையில், வழக்கு எங்கள் கட்சிக்காரருக்கு எதிரானதாக முடியலாம். எனவே, அடுத்த ஆறு மாதத்திற்குள் இந்த வழக்கை விசாரித்து முடிக்க உத்தரவிடுங்கள்,'' என்றார்.
அந்தக் கோரிக்கையை ஏற்க மறுத்த நீதிபதிகள், 'உங்களுக்கு தேவைப்பட்டால், சென்னை உயர் நீதிமன்றத்தை நாடுங்கள். நாங்கள் இந்த விஷயத்தில் எதுவும் செய்ய முடியாது' எனக்கூறி, மனுவை தள்ளுபடி செய்தனர்.
- டில்லி சிறப்பு நிருபர் -

