பொதுப்பணித்துறை முன்னாள் அதிகாரிக்கு லஞ்ச வழக்கில் 5 ஆண்டு சிறை தண்டனை
பொதுப்பணித்துறை முன்னாள் அதிகாரிக்கு லஞ்ச வழக்கில் 5 ஆண்டு சிறை தண்டனை
ADDED : ஜன 05, 2025 12:20 AM
சென்னை:ஒப்பந்த பணிகளுக்கான, 'பில்' தொகையை வழங்க, 10,000 ரூபாய் லஞ்சம் பெற்ற பொதுப்பணித்துறை முன்னாள் செயற்பொறியாளருக்கு, ஐந்து ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து, சென்னை சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
சென்னை திருவல்லிக்கேணி வெங்கட்ரங்கம் பிள்ளை தெருவைச் சேர்ந்தவர் பார்த்திபன். பொதுப்பணித்துறை ஒப்பந்ததாரர்.
இவர், 2004 டிசம்பரில், அயனாவரத்தில் உள்ள ஈ.எஸ்.ஐ., மருத்துவமனையில், கழிவுநீர் அடைப்பு நீக்குதல் தொடர்பான ஒப்பந்த பணியை மேற்கொண்டார். 2005 ஜனவரியில், பணிகளை செய்து கொடுத்துவிட்டு, அதற்கான ரசீதுகளை சமர்ப்பித்து, அப்போது பணியில் இருந்த செயற்பொறியாளர் தயாளனிடம் ஒப்புதல் கேட்டுள்ளார்.
ஆனால், ரசீதுகளுக்கு ஒப்புதல் வழங்க, 10,000 ரூபாய் தர வேண்டும் என்று, தயாளன் கேட்டுஉள்ளார்.
இதுகுறித்து, சென்னை லஞ்ச ஒழிப்பு போலீசில், பார்த்திபன் புகார் செய்தார். போலீசாரின் அறிவுரைப்படி, பணத்தை கொடுத்தபோது, அதை பெற்ற தயாளனை, போலீசார் கையும் களவுமாக கைது செய்தனர்.
தயாளனுக்கு எதிரான இந்த லஞ்ச வழக்கு விசாரணை, சென்னையில் உள்ள சிறப்பு நீதிமன்ற நீதிபதி எஸ்.பிரியா முன் நடந்தது.
போலீசார் தரப்பில், அரசு சிறப்பு வழக்கறிஞர் உஷாராணி ஆஜரானார்.
இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, தயாளன் மீதான குற்றச்சாட்டுகள் சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டு உள்ளதாகக் கூறி, ஐந்து ஆண்டுகள் சிறை தண்டனையும், ஒரு லட்சம் ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.