போலி ஆவணங்கள் வாயிலாக வங்கிகளில் கடன் பெற்று மோசடி -நால்வருக்கு ஜாமின் மறுப்பு
போலி ஆவணங்கள் வாயிலாக வங்கிகளில் கடன் பெற்று மோசடி -நால்வருக்கு ஜாமின் மறுப்பு
ADDED : ஏப் 06, 2025 01:11 AM
சென்னை:போலி ஆவணங்கள் வாயிலாக, தனியார் வங்கி மற்றும் நிதி நிறுவனங்களில், 2 கோடி ரூபாய்க்கு மேல் தனி நபர் கடன் பெற்று மோசடி செய்த வழக்கில் கைதான நான்கு பேரின் ஜாமின் மனுக்களை தள்ளுபடி செய்து, சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை அமைந்தகரையில், எச்.டி.எப்.சி., வங்கியின் கிளை உள்ளது. இங்கு ஆந்திர மாநிலம், சித்துார் மாவட்டத்தை சேர்ந்த குமார், ஏகாம்பரம், கேசவ கங்காராஜூ மற்றும் கிருஷ்ணமூர்த்தி ஆகியோர், தனி நபர் கடன்கள் பெற்றுள்ளனர்.
இதில், குமார் என்பவர், மற்ற மூவரும், 'சாப்ட்வேர்' இன்ஜினியர்களாக பணியாற்றுவதாக போலி ஆவணங்கள் தயாரித்து கொடுத்துள்ளார்.
இந்த போலி ஆவணங்கள் வாயிலாக, கடந்தாண்டு தனி நபர் கடன் பெற்றுள்ளனர். ஆனால், முறையாக கடனுக்கான தவணையை திருப்பி செலுத்தவில்லை.
இதுகுறித்து, வங்கி தரப்பில், சென்னை மத்திய குற்றப்பிரிவில் புகார் அளிக்கப்பட்டது. போலீஸ் விசாரணையில், போலி ஆவணங்கள் வாயிலாக தனி நபர் கடன் பெற்றதும், அனைவரும் கூலி, விவசாய வேலை செய்து வருவதும் தெரியவந்தது.
பின், குமார், ஏகாம்பரம், கேசவ கங்காராஜூ, கிருஷ்ணமூர்த்தி ஆகியோரை கைது செய்தனர். ஜாமின் கேட்டு, சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில், நான்கு பேரும் மனு தாக்கல் செய்தனர். இந்த மனு, நீதிபதி எஸ்.கார்த்திகேயன் முன் விசாரணைக்கு வந்தது.
அப்போது, காவல் துறை தரப்பில் மாநகர குற்றவியல் அரசு வழக்கறிஞர் ஜி.தேவராஜன் வாதாடியதாவது:
விசாரணை ஆரம்ப கட்டத்தில் உள்ளது. மோசடியில் நாகராஜ், மணிகண்டன், கோபால், வெங்கடேஷ், ஹர்ஷா ஆகியோருக்கும் தொடர்பு உள்ளது. அவர்கள் தற்போது தலைமறைவாக உள்ளனர்.
போலி ஆவணங்கள் தயாரித்து, இந்த வங்கியில் மட்டுமின்றி, பல்வேறு வங்கிகள், நிதி நிறுவனங்களில் இருந்து, 2.47 கோடி ரூபாய் வரை கடன் பெற்று மோசடி செய்துள்ளனர்.
குமார் என்பவர் மட்டும், 1.72 கோடி ரூபாய் வரை கமிஷன் பெற்றுள்ளார். மோசடி தொகையை மீட்க வேண்டியுள்ளது; ஜாமின் வழங்கக் கூடாது.
இவ்வாறு அவர் வாதாடினார்.
காவல் துறை தரப்பு வாதத்தை ஏற்ற நீதிபதி, நான்கு பேரின் ஜாமின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

