மின்கம்பி அறுந்து நான்கு பேர் பலி; அரசு அலட்சியமே காரணம்: ராமதாஸ்
மின்கம்பி அறுந்து நான்கு பேர் பலி; அரசு அலட்சியமே காரணம்: ராமதாஸ்
ADDED : அக் 15, 2024 06:28 AM
சென்னை : 'மழை வெள்ளத்தில் மின்கம்பி அறுந்து விழுந்து, ஒரே நாளில் நான்கு பேர் உயிரிழந்ததற்கு, தமிழக அரசும், மின் வாரியத்தின் அலட்சியமுமே காரணம்' என, பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
அவரது அறிக்கை:
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை அதிகாரப்பூர்வமாக துவங்கும் முன், மாநிலம் முழுதும் உள்ள மக்கள், அதன் பாதிப்பை அனுபவிக்க துவங்கி விட்டனர்.
கோவை, மதுரை, புதுக்கோட்டை, சிவகங்கை, கரூர், விருதுநகர் உள்ளிட்ட மாவட்டங்களிலும், மழையால் பெருவெள்ளம் ஏற்பட்டுள்ளது.
துார்வாரவில்லை
இந்த மாவட்டங்களில் மழை பெய்தால் விரைவாக வடியும் வகையில் மழைநீர் வடிகால்களும், மழை நீரை கடத்திச் செல்லும் பாசன கால்வாய்களும் துார்வாரப்படாததே, பெரு வெள்ளத்திற்கு காரணம்.
மதுரை மேலுாரில் கணேசன், சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே அய்யாக்கண்ணு, கடலுார் மாவட்டம் ராமநத்தத்தில் காயத்ரி என்ற 13 வயது சிறுமி, திருப்பத்துார் ஆம்பூர் அருகே குமரேசன் என, நான்கு பேர் நேற்று ஒரே நாளில், அறுந்து விழுந்து கிடந்த மின்சார கம்பியை மிதித்ததால் உயிரிழந்துள்ளனர்.
மழைக்காலங்களில் மேற்கொள்ள வேண்டிய மிக சாதாரணமான பராமரிப்பு பணிகளை கூட மேற்கொள்ளாமல், தமிழக அரசும், மின்சார வாரியமும் எவ்வளவு அலட்சியமாக செயல்பட்டுள்ளன என்பதற்கு, மிகவும் வேதனையான எடுத்துக்காட்டு தான் இந்த உயிரிழப்புகள். இவை அனைத்துக்கும், தமிழக அரசு தான் பொறுப்பேற்க வேண்டும்.
ரூ.10 லட்சம்
சென்னை மாநகரில் பல இடங்களில் மழைநீர் வடிகால் பணிகள் இன்னும் நிறைவடையவில்லை.
சென்னையை மழை தாக்கும் வரை, ஒவ்வொரு நிமிடமும் முக்கியமானவை. மழை பாதிப்புகளில் இருந்து சென்னை மாநகர மக்களை காக்க, அரசும், மாநகராட்சியும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
தமிழக பா.ஜ., மாநில செயலர் அஸ்வத்தாமன் வெளியிட்ட அறிக்கையில், 'மழைக்காலம் துவங்கியுள்ள நிலையில், மின்கம்பி அறுந்து விழுந்து ஏற்படும் உயிரிழப்புகள் தடுக்கப்பட வேண்டும். உயிரிழந்த நான்கு பேரின் குடும்பங்களுக்கு, தலா, 10 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும்' என, தெரிவித்துள்ளார்.