'இன்டர்ன்ஷிப்' மாணவர்களை குறிவைக்கும் மோசடி கும்பல்: பணம் பறிப்பதில் புது வழி
'இன்டர்ன்ஷிப்' மாணவர்களை குறிவைக்கும் மோசடி கும்பல்: பணம் பறிப்பதில் புது வழி
ADDED : அக் 28, 2025 04:22 AM

சென்னை: 'இன்டர்ன்ஷிப்' பயிற்சிக்காக நிறுவனங்களை தேடும் மாணவர்களை குறிவைத்து, புது மோசடி நடந்து வருகிறது.
கல்லுாரி இறுதியாண்டு படிக்கும் மாணவ - மாணவியர், தங்களின் பாடங்களுக்கேற்ப, 'இன்டர்ன்ஷிப்' எனும் களப்பயிற்சிக்கு, அரசு மற்றும் தனியார் நிறுவனங்களை அனுகுவர்.
அதாவது மாணவர்கள் ஒரு மாதம் நிறுவனங்களுக்கு சென்று, களப்பயிற்சி எடுக்க வேண்டும். இது கல்லுாரிகளில் உள்ள பாடத்திட்டத்தின் ஒரு பகுதி.
இந்நிலையில், ஆன்லைனில் நிறுவனங்களை தேர்வு செய்து விண்ணப்பிக்கும்போது, பல போலி நிறுவனங்கள் இயங்குகின்றன. அவை தகவல்களை பெற்றுக்கொண்டு, முன்னணி நிறுவனம் போல காண்பித்து, மாணவர்களை ஏமாற்றுகின்றன.
எனவே, மாணவர்கள் பயிற்சிக்கு செல்வதற்கு முன், அந்நிறுவனத்தை பற்றி ஆராய்ந்து சேர்வது நல்லது என, சைபர் பாதுகாப்புத் துறை வல்லுநர்கள் எச்சரிக்கின்றனர்.
இது குறித்து, சைபர் பாதுகாப்பு துறை மாணவர்கள் கூறியதாவது:
சென்னையில் உள்ள கல்லுாரி ஒன்றில், சைபர் பாதுகாப்புத் துறை இறுதியாண்டு படித்து வருகிறோம். 'இன்டர்ன்ஷிப்' பயிற்சிக்காக ஒவ்வொருவரும் தனித்தனி நிறுவனங்களில் விண்ணப்பித்து வந்தோம்.
அப்போது எங்களுக்கான கல்லுாரியின் இ - மெயில் முகவரிக்கு, 'சாம்கர் சாப்ட்வேர் சொலு சன்ஸ்' என்ற நிறுவனத்தில் இருந்து மெயில் வந்தது.
அதில், 'எங்கள் நிறுவனத்தில் தேர்வு செய்யப்பட்டுள்ளீர்கள்; மற்ற விபரங்களை பூர்த்தி செய்யுங்கள். உங்களுக்கு உதவித்தொகையாக, 15,000 ரூபாய் வழங்கப்படும்' என கூறப்பட்டு இருந்தது.
பின் 'வீடியோ கான்பரன்ஸ்' வாயிலாக நேர்காணல் நடத்தினர். அடுத்த சில நாளில், 'போலீஸ் கிளியரன்ஸ் சான்றிதழ் பெற்று பதிவேற்ற வேண்டும்; அதற்கு, 2,000 ரூபாய் பணத்தை, யு.பி.ஐ., வாயிலாக செலுத்த வேண்டும்' என கூறப்பட்டது.
அதையடுத்து, இ - மெயிலை முழுதும் ஆராய்ந்ததில், அது போலி என்பது தெரியவந்தது. இவ்வாறு அவர்கள் கூறினர்.

