மகப்பேறு நிதியுதவி திட்டத்தில் மோசடி; சட்டப்படி நடவடிக்கை: சுப்பிரமணியன்
மகப்பேறு நிதியுதவி திட்டத்தில் மோசடி; சட்டப்படி நடவடிக்கை: சுப்பிரமணியன்
ADDED : நவ 14, 2024 04:31 AM
சென்னை : ''புதுக்கோட்டை மாவட்டத்தில், முத்துலெட்சுமி மகப்பேறு நிதியுதவி திட்டத்தில், முறைகேடு செய்தவர்கள் மீது, சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்,'' என, மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் சுப்பிரமணியன் தெரிவித்தார்.
அவரது பேட்டி:
புதுக்கோட்டையில், முத்துலெட்சுமி மகப்பேறு நிதியுதவி திட்டத்தில், தவறு நடந்ததாக வந்த புகார் குறித்து விசாரிக்க, சிறப்பு தணிக்கை குழு அனுப்பப்பட்டது. கடியாபட்டி வட்டார அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில், தணிக்கை குழுவினர் ஆய்வு செய்ததில், 2019ம் ஆண்டு முதல் 2024 வரை, மோசடி நடந்திருப்பது தெரிய வந்தது.
அங்கு பணியாற்றிய ஊழியர்கள், மகப்பேறு திட்டத்தில் பயன்பெறும் பயனாளிகள் போல், போலியாக பட்டியல் தயாரித்து, 16 வங்கி கணக்கில், 18.60 லட்சம் ரூபாய் வரவு வைத்துள்ளனர். இதில், ஒரு வட்டார கணக்கு உதவியாளர், ஒரு இளநிலை உதவியாளர் சம்பந்தப்பட்டுள்ளனர். அவர்கள் மீது புதுக்கோட்டை எஸ்.பி.,யிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது. சட்டரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும்.
அந்த காலத்தில் பணியாற்றிய, வட்டார மருத்துவ அலுவலர்களுக்கும், சம்மந்தம் உள்ளதா என ஆய்வு செய்ய இருக்கிறோம். சென்னையில் இருந்து கூடுதல் இயக்குநர் சம்பந்தப்பட்ட மருத்துவமனையில் ஆய்வு செய்ய உள்ளார். இந்த சம்பவத்தில், தவறு செய்த அனைவர் மீதும் சட்டப்படியான நடவடிக்கை எடுக்கப்படும்
இவ்வாறு அவர் கூறினார்.

