ஆசிரியர்கள், மாணவர்களுக்கு ஏ.ஐ., தொடர்பான இலவச கல்வி
ஆசிரியர்கள், மாணவர்களுக்கு ஏ.ஐ., தொடர்பான இலவச கல்வி
ADDED : நவ 03, 2025 01:00 AM
சென்னை: மத்திய கல்வி அமைச்சகத்தின் சார்பில், செயற்கை நுண்ணறிவு திறன் சார்ந்த ஐந்து படிப்புகள், 'ஆன்லைன்' முறையில் இலவசமாக கற்பிக்கப்பட உள்ளன.
செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதற்கேற்ப, கல்வியில் பல்வேறு மாற்றங்களை செய்ய, மத்திய கல்வி அமைச்சகம் முன்வந்துள்ளது. முதற்கட்டமாக, மூன்றாம் வகுப்பு முதல் செயற்கை நுண்ணறிவு சார்ந்த பாடங்களை அறிமுகம் செய்ய உள்ளது.
மேலும், விளையாட்டு, கல்வி, அறிவியல், நிதி உள்ளிட்ட துறைகளிலும், செயற்கை நுண்ணறிவு மற்றும் தரவு அறிவியல் திறன்களை வளர்க்கும் வகையில், மாணவர்கள், ஆசிரியர்கள், கல்வியாளர்கள், நிபுணர்களுக்கான படிப்புகளை, 'ஆன்லைன்' வாயிலாக இலவசமாக நடத்த உள்ளது.
அந்த வகையில், மத்திய அரசின் கல்வி இணையதளமான, 'ஸ்வயம்' வாயிலாக, இயந்திர கற்றல், கிரிக்கெட் பகுப்பாய்வு, இயற்பியல், வேதியியல், கணக்கியல் துறைகளில், செயற்கை நுண்ணறிவின் பயன்பாடு குறித்த பாடம், நிகழ்கால விளக்கங்களுடன் நடத்தப்படுகிறது.
இதில், ஆர்வமுள்ள மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள், 'https://swayam.gov.in' என்ற இணையதளம் வாயிலாக பங்கேற்கலாம். படிப்பை முடித்த பின், கல்வி அமைச்சகத்தின் சார்பில் சான்றிதழ் வழங்கப்படும்.

