ககன்யான் திட்டத்தில் முன்னேற்றம் மார்ச்சில் ஆளில்லாத விண்கலம் பாயும் 'இஸ்ரோ' தலைவர் தகவல்
ககன்யான் திட்டத்தில் முன்னேற்றம் மார்ச்சில் ஆளில்லாத விண்கலம் பாயும் 'இஸ்ரோ' தலைவர் தகவல்
ADDED : நவ 03, 2025 01:01 AM
சென்னை:'இஸ்ரோ' தலைவர் நாராயணன் தெரிவித்தார்.
அவரது பேட்டி:
'எல்.வி.எம்., 3 - எம் 5' ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது. எல்.வி.எம்., திட்டத்தில் இது எங்களது எட்டாவது வெற்றி. இதற்காக பணியாற்றிய விஞ்ஞானி களுக்கு பாராட்டுகள்.
மனிதர்களை விண்ணுக்கு அனுப்பும், 'ககன்யான்' திட்ட பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகின்றன. அதற்கு முன், மூன்று ஆளில்லா விண்கலங்களை அனுப்பும் திட்டம் செயல் படுத்தப்பட உள்ளது.
அதில், முதல் திட்டத்தை, 2026 மார்ச் 31ம் தேதிக்கு முன் செயல்படுத்த திட்டமிட்டுள்ளோம். இதற்கான உபகரணங்கள் ஸ்ரீஹரிகோட்டாவுக்கு வந்துள்ளன. தற்போது அவற்றை ஒருங்கிணைக்கும் பணி நடக்கிறது.
பிரதமர் நரேந்திர மோடி, அடுத்த ஐந்து ஆண்டுகளில், 50 விண்வெளி திட்டங்களை செயல்படுத்த இலக்கு நிர்ணயித்துள்ளார். இது, எளிதானது கிடையாது. அதற்காக நாங்கள் தீவிரமாக பணியாற்றி வருகிறோம்.
அடுத்ததாக இந்த நிதியாண்டுக்குள், ஏழு திட்டங்களை செயல்படுத்த உள்ளோம். உடனடியாக வணிக நோக்கத்தில், கண்காணிப்பு செயற்கைக் கோள் ஒன்று, 'எல்.வி.எம்., 3 - எம் 6' ராக்கெட் வாயிலாக விண்ணில் ஏவப்பட உள்ளது. அதன்பின், மூன்று பி.எஸ்.எல்.வி., திட்டங்கள் செயல்படுத்தப்பட உள்ளன. ஸ்ரீஹரிகோட்டா மூன்றாவது ஏவுதளம் அமைக்கும் பணிகளும் நடக்கின்றன.
தமிழகத்தில் குலசேகரப்பட்டினம் பகுதியில் ஏவு தளம் அமைக்கும் பணிகள் முடிவடைந்த பின், மூன்று வாரங்களுக்கு ஒருமுறை, சிறிய ரக ராக்கெட்டுகளை விண்ணில் ஏவ திட்டமிட்டுள்ளோம்.
இவ்வாறு அவர் கூறினார்.

