மந்திரிகள், எம்.எல்.ஏ.,க்களுக்கு இலவச பச்சை துண்டு: எதிர்க்கட்சிகளுக்கு இல்லை
மந்திரிகள், எம்.எல்.ஏ.,க்களுக்கு இலவச பச்சை துண்டு: எதிர்க்கட்சிகளுக்கு இல்லை
ADDED : மார் 16, 2025 12:30 AM

சென்னை:சட்டசபையில் நேற்று, வேளாண் பட்ஜெட் தாக்கலின்போது, அமைச்சர்கள் மற்றும் எம்.எல்.ஏ.,க்களுக்கு இலவச பச்சைத்துண்டுகள் வழங்கப்பட்டன.
வேளாண் பட்ஜெட்டில், கால்நடை பராமரிப்பு, மீன்வளம், பால்வளம், எரிசக்தி, கூட்டுறவு, உணவு உள்ளிட்ட துறைகளுக்கான அறிவிப்புகளும் இடம் பெறுகின்றன.
வேளாண் பட்ஜெட் தொடர்பாக விவசாயிகள், வியாபாரிகள் உள்ளிட்டோருடன் கருத்துக் கேட்பு கூட்டமும் நடத்தப்படுகிறது. அரசின் இந்த நடவடிக்கை, விவசாயிகள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது.
ஒவ்வொரு ஆண்டும் பட்ஜெட் தாக்கலின் போது, பச்சைத்துண்டு அணிந்து வருவதை, வேளாண் துறை அமைச்சர் பன்னீர்செல்வம் வழக்கமாக வைத்துள்ளார். நேற்று ஐந்தாவது ஆண்டாக, அவர் பட்ஜெட் தாக்கல் செய்தார்.
பட்ஜெட் தாக்கலின் போது சபைக்கு வந்த அமைச்சர்கள், ஆளும் கட்சி, கூட்டணி கட்சி எம்.எல்.ஏ.,க்கள் அனைவருக்கும், அமைச்சர் பன்னீர்செல்வம் ஏற்பாட்டில் பச்சை நிற துண்டுகள் வழங்கப்பட்டன.
ஆர்வமுடன் எம்.எல்.ஏ.,க்கள் அணிந்து கொண்டனர். சிலர், தலையில் முண்டாசு போலவும் கட்டிக் கொண்டனர்.
வேளாண் பட்ஜெட் தாக்கலின்போது, பச்சை துண்டு அணிந்து வருவது, பா.ம.க.,வினர் வழக்கம். அதன்படியே நேற்று அவர்களும் பச்சை துண்டுடன் வந்தனர்.
அமைச்சர் தரப்பில் வழங்கிய துண்டுகளை பெற்று, கழுத்தில் போட்டுக் கொண்டனர்.
ஏற்கனவே எடுத்து வந்த துண்டை மடித்து வைத்துக் கொண்டனர். அ.தி.மு.க., - பா.ஜ., உள்ளிட்ட எதிர்க்கட்சி எம்.எல்.ஏ.,க்களுக்கு பச்சைத்துண்டு வழங்கப்படவில்லை.