அறுபடை வீடுகளுக்கு இலவச ஆன்மிக சுற்றுலா: அமைச்சர் கேகர் பாபு
அறுபடை வீடுகளுக்கு இலவச ஆன்மிக சுற்றுலா: அமைச்சர் கேகர் பாபு
ADDED : ஜன 11, 2024 12:35 AM

சென்னை: ''மூத்த குடிமக்கள் அறுபடை வீடுகளுக்கு ஆண்டிற்கு ஐந்து முறை கட்டணம் இல்லாமல், ஆன்மிக சுற்றுலா அழைத்துச் செல்லப்படுவர்,'' என, அமைச்சர் சேகர்பாபு தெரிவித்தார்.
கோவில்களில் பணியாற்றி ஓய்வு பெற்ற, 2,646 அர்ச்சகர்கள், பணியாளர்களுக்கு, பொங்கல் கொடை வழங்கும் திட்டத்தை, சென்னை, நுங்கம்பாக்கம், அறநிலையத்துறை தலைமையகத்தில் அமைச்சர் சேகர்பாபு துவக்கி வைத்து பத்து நபர்களுக்கு தலா, 1,000 ரூபாய்க்கான காசோலையை வழங்கினார்.
அமைச்சர் சேகர்பாபு கூறியதாவது:
மானிய கோரிக்கையில் அறிவித்தப்படி, கோவில்களில் பணிபுரிந்து ஓய்வு பெற்ற அர்ச்சகர்கள் மற்றும் பணியாளர்களுக்கு, பொங்கல் கொடை வழங்கும் திட்டம் துவக்கப்பட்டுள்ளது.
அறநிலையத்துறை சார்பில், முருகப் பெருமானின் அறுபடை வீடுகளுக்கு, 60 - -70 வயதிற்குட்பட்டவர்கள் ஒருமுறைக்கு, 200 பேர் வீதம், ஆண்டிற்கு ஐந்து முறை, 1,000 பேர் கட்டணம் இல்லாமல் அழைத்து செல்லப்பட உள்ளனர்.
முதல்கட்ட பயணம், 28ம் தேதி துவங்குகிறது. இதற்கான விண்ணப்பங்களை நாளை முதல், துறையின் இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து விண்ணப்பிக்கலாம். தைப்பூசத்தை முன்னிட்டு, 10 நாட்கள் தினமும், 10,000 பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படும்.
அறுபடை வீடு கோவில்களில் தைப்பூசத்திற்கு சிறப்பு தரிசன கட்டணத்தை ரத்து செய்வது தொடர்பாக கலந்தாலோசித்து முடிவெடுக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்நிகழ்ச்சிகளில் அற நிலையங்கள் துறை கூடுதல் தலைமைச் செயலர் மணிவாசன், அறநிலையத்துறை சிறப்பு பணி அலுவலர் குமரகுருபரன், கமிஷனர் முரளீதரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

