சேலம் ஏர்போர்ட்டில் கொச்சி விமானங்கள் அடிக்கடி ரத்து; பயணியர் அவதி
சேலம் ஏர்போர்ட்டில் கொச்சி விமானங்கள் அடிக்கடி ரத்து; பயணியர் அவதி
UPDATED : ஜூலை 23, 2025 03:51 AM
ADDED : ஜூலை 22, 2025 11:56 PM

சேலம் விமான நிலையத்தில், 'அலையன்ஸ் ஏர்' விமான நிறுவனம் சார்பில் இயக்கப்படும் விமானங்கள், தொடர்ந்து ரத்து செய்யப்படுவது, பயணியர் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.
மத்திய அரசின், 'உடான்' திட்டத்தின் கீழ், சேலம் விமான நிலையம் இயங்குகிறது. சிறிய முனையம், அளவான ஓடுபாதை போன்றவற்றால், சேலத்தில் இருந்து, ஏ.டி.ஆர்., எனப்படும், சிறிய ரக விமானங்களை இயக்குவது மட்டுமே சாத்தியமாக உள்ளது.
ஓடுபாதை, வளாகங்கள், விமான தகவல் கட்டுப்பாட்டு கோபுரம் மேம்படுத்தப்பட்டால், பெரிய ரக விமானங்கள் இயக்கும் வகையில் சேலம் முன்னேறும்.
சேலத்தில் இருந்து, சென்னை, ஹைதராபாத், பெங்களூரு, கொச்சி என, நான்கு நகரங்களுக்கு விமானங்கள் இயக்கப் படுகின்றன.
இங்கிருந்து குறைந்த அளவிலே விமானங்கள் இயக்கப்படும் நிலையில், நிர்வாக காரணம், தொழில்நுட்ப கோளாறு எனக்கூறி, அலையன்ஸ் ஏர் நிறுவனம், விமானங்களை அடிக்கடி ரத்து செய்வது தொடர் கதையாகி வருகிறது.
குறிப்பாக, இந்நிறுவனம் கொச்சிக்கு இயக்கும் விமானங்கள் அடிக்கடி ரத்தாகின்றன. இது, பயணியர் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.
இதுகுறித்து விமான பயணியர் சிலர் கூறியதாவது:
சேலத்தில் இருந்து கொச்சிக்கு, சாலை மார்க்கமாக செல்ல, குறைந்தது 8 மணி நேரமாகும். ரயிலில் டிக்கெட் கிடைப்பதில்லை. விமானத்தில் ஒரு மணி நேரத்தில் செல்ல முடிகிறது. சமீப நாட்களாக, விமான டிக்கெட் முன்பதிவு செய்து காத்திருந்தாலும், அலையன்ஸ் ஏர் நிறுவனத்தின் விமானங்கள் ரத்தாகின்றன.
கடந்த, 15ம் தேதியில் இருந்து நேற்று வரை, சேலம் - கொச்சி விமானங்கள், எட்டு முறை ரத்து செய்யப்பட்டுள்ளன.
இது, குறைந்த கட்டணத்தில் நிறைவான சேவையை அனுபவிக்க நினைப்போருக்கு சங்கடமாக மாறுகிறது. அலையன்ஸ் ஏர் நிறுவனம், தடையில்லாமல் விமான சேவை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.
சேலம் விமான நிலைய இயக்குநர் வைதேகி நாதன் கூறுகையில், ''சேலம் விமான நிலையத்தில் கூடுதல் விமான சேவை வழங்க, விமான நிறுவனங்களுடன் பேச்சு நடத்துவது, பயணியருக்கு தேவையான அடிப்படை வசதிகளை மேம்படுத்துவது போன்றவற்றில், தனிக் கவனம் செலுத்தப்படுகிறது. வரும் நாட்களில் சிரமமில்லாமல் சேவைகள் கிடைக்க வழிவகை செய்யப்படும்,'' என்றார்.
சேவைகள் அதிகரிக்கப்படுமா?
சேலத்தில் இருந்து சென்னைக்கு இயக்கப்படும் விமானங்களில், 80 சதவீதத்திற்கும் அதிகமான பயணியர் எண்ணிக்கை உள்ளது. ஆனால், குறைந்த சேவைகள் மட்டுமே உள்ளன. சேலம் ஏர்போர்ட் ஒரு, 'ஷிப்ட்' விமான நிலையம் என்பதால், இரவு நேரங்களில் விமான இயக்கம் கிடையாது. எனவே, மதிய நேரத்தில், சென்னை - சேலம் இடையே, விமான சேவையை அதிகரிக்க கோரிக்கை எழுந்துள்ளது.
அதேபோல, சேலத்தில் இருந்து பெங்களூரு, ஹைதராபாதுக்கு, வாரத்திற்கு நான்கு நாட்கள் மட்டுமே விமானங்கள் இயக்கப்படுகின்றன. இதை தினசரி சேவையாக மாற்ற, விமான நிலைய ஆணைய அதிகாரிகள் பேச்சு நடத்த வேண்டும் என்பதும், பயணியரின் எதிர்பார்ப்பாக உள்ளது.
- நமது நிருபர் -