காந்தி நோட்டு, கள்ள ஓட்டு: தி.மு.க., வெற்றி குறித்து சீமான் கருத்து
காந்தி நோட்டு, கள்ள ஓட்டு: தி.மு.க., வெற்றி குறித்து சீமான் கருத்து
ADDED : பிப் 10, 2025 12:06 PM

திருச்சி: '' காந்தி நோட்டு. கள்ள ஓட்டு. இதுதான் தி.மு.க.,வின் வெற்றி.,'' என நாம் தமிழர் கட்சியின் சீமான் கூறியுள்ளார்.
சீமான் நிருபர்களிடம் கூறியதாவது: எங்களிடம் நேர்மயை தவிர ஒன்றும் இல்லை. அவர்களிடம் நேர்மை இல்லை. அவர்களுக்கு தேர்தல் கமிஷன், போலீசார் வேலை பார்த்தனர். பல்வேறு நெருக்கடிகள், கள்ள ஓட்டு, ஓட்டுக்கு காசு. காந்தி நோட்டு, கள்ள ஓட்டு. இதுதான் அவர்கள் பெற்ற வெற்றி.
டெபாசிட்டை இழந்தாலும் நம்பிக்கையுடன் இருக்கிறோம், விலைபோகாத வாக்குகள் எங்களுக்கு பதிவாகி உள்ளது. 2026 ல் மிகப்பெரிய மாறுதலை நிகழ்த்துவோம் . அந்த நம்பிக்கையில் பயணிக்கிறோம். கடந்த தேர்தலில் பா.ஜ.,அ.தி.மு.க.,வின் ஓட்டுகள் நாம் தமிழர் கட்சிக்கு வந்தது என்பது கேவலமான பார்வை. திராவிட சிந்தனையாளர்கள் தான் அப்படி யோசிப்பார்கள். 15 கட்சிகளுடன் கூட்டணி வைத்து நீங்கள் வாங்கியது தி.மு.க., ஓட்டுகள் என்கிறீர்கள்.
தனித்து நின்று நாங்கள் வாங்கிய ஓட்டை அ.தி.மு.க., ஓட்டு, பா.ஜ., ஓட்டு என்கிறீர்கள். அவர்கள் ஓட்டு போட்டு இருந்தால் நான் வெற்றி பெற்றிருப்பேன். நோட்டாவுக்கு கடந்த முறை 797 ஓட்டு கிடைத்தது. தற்போது 6 ஆயிரம் ஆக உள்ளதற்கு காரணம் என்ன. 42 சுயேச்சைகள் 12 ஆயிரம் ஓட்டுகள் வாங்கி உள்ளனர். அவர்களுக்கு ஓட்டு போட்டது யார்? பா.ஜ., எனக்கு ஏன் ஓட்டுப்போட வேண்டும்.கடந்த முறை பா.ஜ., நிற்கவில்லை. எனக்கு தான் போட்டதா ? விக்கிரவாண்டியில் பா.ஜ., அ.தி.மு.க., நிற்கவில்லை. எனக்கு தான் போட்டதா? நான் வளர வேண்டும் என அவர்கள் எப்படி விரும்புவார்கள். அவர்களை எதிர்த்து தான் நிற்கிறேன். எப்படி என்னை ஆதரிப்பார்கள்.
நான் வீரன். எனக்கு படையெல்லாம் தேவையில்லை. சண்டைக்கு தனியாகத் தான் போவேன். என்னை அடிக்க வர்றான் நான்கு பேர் வாங்கனு கூட்டிட்டு போறதுக்கு நான் நாய், நரி கிடையாது. நான் புலி. தனித்து தான் வேட்டையாடுவேன்.நான் துவக்கத்தில் இருந்து சொல்கிறேன். நான் தனியாக தான் நிற்பேன் என்று. கோழைக்கு தான் கூட்டத்தோடு நிற்கணும். கூட்டத்தோடு நிற்பவனுக்கு வீரமும், துணிவும் தேவையில்லை. தனித்து நிற்பவனுக்கு வீரமும் துணிவும் தேவை. எனது கோட்பாடு தனித்து தான் நிற்கும்.
பா.ஜ., என்னை ஏன் முதல்வர் வேட்பாளராக அறிவிக்க வேண்டும். சும்மா பேசுகிறார்கள். இந்திய கட்சிகளுக்கு, தமிழக கட்சிகளுக்கு எதிரானது எனது கட்சி. ஈ.வெ.ரா.,வுக்கு எதிராக இப்போது தான் பேச துவங்கி உள்ளேன். ஈ.வெ.ரா.,வுக்கா ஓட்டு? காந்திக்கு தான் ஓட்டு. காந்தியை வணங்குங்கள்.
திராவிடத்தை பேசுபவர்கள், தி.மு.க.,வில் உள்ளவர்கள், காந்தியை வணங்குங்கள். போற்றுங்கள். ஈ.வெ.ரா.,வை அசிங்கமாக பேசிவிட்டார் என சொன்னவர்களுக்கு 222 ஓட்டு தான் கிடைத்தது. உலகமே ஈ.வெ.ரா.,வை ஏற்றுக் கொண்டாலும் நான் எதிர்ப்பேன். ஈ.வெ.ரா., எங்களுக்கு தேவையில்லை. எனக்கு தேவையில்லை. என்னை பின்பற்றுபவர்கள் ஈ.வெ.ரா., வேண்டும் என்றால் வெளியேறி செல்லலாம். இவ்வாறு சீமான் பேசினார்.

