உள்ளுறுப்புகள் தானம் தாராளம்; வெளி உறுப்புகள் அளிக்க தயக்கம்
உள்ளுறுப்புகள் தானம் தாராளம்; வெளி உறுப்புகள் அளிக்க தயக்கம்
UPDATED : ஜன 10, 2026 07:50 AM
ADDED : ஜன 10, 2026 07:44 AM

சென்னை: தமிழகத்தில், உடல் உறுப்புகள் தானத்தில், உள்ளுறுப்புகளை தானம் அளிக்க பலர் முன்வரும் நிலையில், வெளி உறுப்புகளான கைகள், வயிறு போன்றவற்றை தானம் அளிக்க பலரும் தயக்கம் காட்டி வருகின்றனர்.
நாட்டின் பிற மாநிலங்களை விட, தமிழகத்தில் உறுப்பு மாற்று நடவடிக்கைகள் சிறப்பாக நடக்கின்றன. இதனால், தேசிய அளவில் உடல் உறுப்பு தானத்தில் தமிழகம் முதலிடத்தில் உள்ளது.
உடல் உறுப்புகள் தானத்தை ஊக்குவிக்கும் வகையில், மூளைச்சாவு அடைந்த பின் உறுப்பு தானம் செய்யும் உடலுக்கு, அரசு மரியாதை மற்றும் குடும்பத்தினர் கவுரவிப்பு நிகழ்வுகள் நடத்தப்படுகின்றன.
கடந்த 2025ல், மூளைச்சாவு அடைந்தவர்களில், 266 பேர் உடல் உறுப்புகளை தானம் அளித்து உள்ளனர்.
இதில், சிறுநீரகம், 450; கல்லீரல், 220 பேர் தானம் அளித்த நிலையில், வயிறு, கைகள் போன்றவற்றை தானம் அளிக்க, பலர் தயக்கம் காட்டி வருகின்றனர்.
தமிழக உறுப்பு மாற்று ஆணைய உறுப்பினர் செயலர் கோபாலகிருஷ்ணன் கூறியதாவது:
தமிழக அரசின் நடவடிக்கையால், உடல் உறுப்புகள் தானம் அளிப்போர், ஒவ்வொரு ஆண்டும் அதிகரித்து வருகின்றனர். இதன் பயனாக, ஆண்டுதோறும் 1,500 பேர் வரை பயனடைந்து வருகின்றனர்.
சிறுநீரகம், கல்லீரல், இதயம் போன்றவை தானம் அளிக்க பலர் முன்வந்தாலும், வெளி உறுப்புகளை தானம் அளிக்க மக்களிடையே தயக்கம் இருக்கிறது. கைகள் தானமாக பெறப்பட்டாலும், அந்த உடலுக்கு செயற்கை கைகள் பொருத்தப்படும்.
இதனால், இறந்த உடல் கைகள் இல்லாமல் இருக்கும் என்ற தயக்கம் வேண்டாம். அவர்கள் தானம் அளித்த கைகள், மற்றவர்களுக்கு வாழ்வு அளிக்கும்.
ஆனாலும், வெளி உறுப்புகள் தானம் அளிப்பதில், மக்களிடையே உளவியல் ரீதியான சிக்கல் இருப்பதால், தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.இவ்வாறு அவர் கூறினார்.

