ADDED : ஏப் 03, 2025 07:42 PM
சென்னை:'சட்டசபையில் கச்சத்தீவு தீர்மானம் நிறைவேற்றியது, சட்டசபை தேர்தலுக்காக, தி.மு.க., நடத்திய நாடகம்' என, த.மா.கா., தலைவர் ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார்.
அவரது அறிக்கை:
தமிழக அரசு கச்சத்தீவு தொடர்பாக, சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றி, மக்களை ஏமாற்ற நினைக்கிறது. காங்கிரஸ் ஆட்சியில்தான் கச்சத்தீவு, இலங்கைக்கு தாரை வார்க்கப்பட்டது. அப்போதிருந்த தி.மு.க., தலைமையிலான அரசு மவுனம் காத்தது. இதுவரை தி.மு.க., கச்சத்தீவு பிரச்னைக்கும், மீனவர்கள் பிரச்னைக்கும், ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை எடுக்கவில்லை.
பிரதமர் மோடி, ராமேஸ்வரத்தில் பாம்பன் பாலத்தை திறக்க வரும் நேரத்தில், சட்டசபை தேர்தலை மனதில் வைத்து, கச்சத்தீவு தீர்மானம் நிறைவேற்றி, தி.மு.க., அரசு மக்களை நம்ப வைக்க முயற்சிக்கிறது. தி.மு.க.,வின் நாடகம், உள்நோக்கம் கொண்டது. மத்திய அரசு கச்சத்தீவை மீட்க எடுக்கும் முயற்சி வெற்றி பெறும் என நம்புகிறோம்.
எனவே, தி.மு.க., அரசு மக்களை ஏமாற்றும் செயல்களில் ஈடுபடாமல், மக்கள் பிரச்னைகளில், அதிக கவனம் செலுத்தி, மக்கள் நலன் காக்க வேண்டும்.
இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.

