மகளிர் விடுதிகளில் இட அளவு குறைப்பு விதிகளை திருத்தியது அரசு
மகளிர் விடுதிகளில் இட அளவு குறைப்பு விதிகளை திருத்தியது அரசு
ADDED : டிச 10, 2025 07:59 AM

சென்னை: மகளிர், சிறார் இல்லங்கள் மற்றும் விடுதிகளில், தனி நபருக்கான இட பரப்பளவு, 120 சதுரடி என்பதை, 50 சதுரடியாக குறைத்து, விதிகள் திருத்தி அமைக்கப்பட்டுள்ளன.
தமிழகத்தில், சமூக நலத்துறை வாயிலாக, மகளிர், சிறார் இல்லங்கள், விடுதிகள் கட்டப்படுகின்றன. இது தவிர, தொண்டு நிறுவனங்களும் விடுதிகள் கட்டுகின்றன. மகளிர், சிறார்களுக்கு முறையான உறைவிடம் இருக்க வேண்டும் என்பதற்காக, தமிழக மகளிர், சிறார் விடுதிகளுக்கான ஒழுங்கு முறை விதிகள், 2015ல் வெளியிடப்பட்டது.
அதில், மகளிர், சிறார்களுக்கான உறைவிட வசதியில், குறைந்தபட்ச இட அளவு குறிப்பிடப்பட்டிருந்தது. அதன்படி, தனி நபர் ஒருவருக்கு, 120 சதுர அடி என்ற அளவில், அறைகள் இருக்க வேண்டும்.
இந்த அளவுக்கு இடம் ஒதுக்குவதில் ஏற்படும் பிரச்னைகள் குறித்து, பல்வேறு தரப்பு சார்பில், அரசிடம் முறையிடப்பட்டது. இதையடுத்து தமிழக மகளிர், சிறார் இல்லங்கள், விடுதிகள் விதியில், திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டன.
அதன்படி, இட பரப்பளவு வரம்பு, 120 சதுரடியில் இருந்து, 50 சதுரடியாக குறைக்கப்பட்டுள்ளது. இவ்விபரம், தமிழ்நாடு அரசிதழில், சமூக நலத்துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ளது.

