அரசு மற்றும் கட்சி நிகழ்ச்சிகள் முதல்வர் இன்று கடலுார் பயணம்
அரசு மற்றும் கட்சி நிகழ்ச்சிகள் முதல்வர் இன்று கடலுார் பயணம்
ADDED : பிப் 21, 2025 12:52 AM
சென்னை:அரசு மற்றும் கட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக, இரண்டு நாள் பயணமாக, முதல்வர் ஸ்டாலின் இன்று கடலுார் செல்கிறார்.
முதல்வர் ஸ்டாலின், மாவட்ட வாரியாக சுற்றுப்பயணம் செய்து, அரசு மற்றும் கட்சி பணிகளில் கவனம் செலுத்தி வருகிறார்.
அந்த வகையில், கடலுார் மாவட்டத்திற்கு இன்று மாலை முதல்வர் செல்ல உள்ளார். மஞ்சம்குப்பத்தில் நடக்க உள்ள நிகழ்ச்சியில், 384 கோடி ரூபாய் மதிப்பில், ஆரம்ப சுகாதார நிலையம் உள்ளிட்ட, 178 பணிகளுக்கு அடிக்கல் நாட்டுகிறார்.
வேளாண் துறை சார்பில், சி.என்.பாளையத்தில், 16.3 கோடி ரூபாய் மதிப்பில் அமைக்கப்பட உள்ள, பண்ருட்டி பலா மதிப்புகூட்டு மையத்திற்கும் அடிக்கல் நாட்டுகிறார்.
நேரடி நெல் கொள்முதல் நிலையம் உட்பட, 704 கோடி ரூபாயில் கட்டப்பட்ட, 602 கட்டடங்களையும் திறந்து வைக்கிறர்.
மேலும், 45,469 பேருக்கு, 1,476 கோடி ரூபாய் மதிப்பிலான, நலத்திட்ட உதவிகள் வழங்கும் பணியை துவக்கி வைக்கிறார்.
நாளை காலை சில நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார். நடை பயணமாக சிறிது துாரம் சென்று, மக்களை சந்திக்கவும், முதல்வர் ஸ்டாலின் திட்டமிட்டு உள்ளார்.

