சுங்கச்சாவடி கட்டண பாக்கி சர்ச்சைக்கு நல்ல தீர்வு காணப்படும் என அரசு உறுதி
சுங்கச்சாவடி கட்டண பாக்கி சர்ச்சைக்கு நல்ல தீர்வு காணப்படும் என அரசு உறுதி
ADDED : ஜூலை 09, 2025 11:55 PM
சென்னை:தென் மாவட்டங்களுக்கு செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள நான்கு சுங்கச்சாவடிகளுக்கு செலுத்த வேண்டிய கட்டண பாக்கி விவகாரத்தை முடிவுக்கு கொண்டு வர, நல்ல தீர்வுடன் இன்று வருவதாக, சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்துள்ளது.
தென் மாவட்டங்களுக்கு செல்லும் தேசிய நெடுஞ்சாலையில், மதுரை - கன்னியாகுமரி, கன்னியாகுமரி - எட்டூர்வட்டம், சாலைப்புதுார் - மதுரை, நாங்குநேரி - கன்னியாகுமரி ஆகிய நான்கு சுங்கச்சாவடிகள் வழியாக அரசு பஸ்களை இயக்கியதற்காக, சுங்க கட்டண பாக்கி, 276 கோடி ரூபாயை, அரசு போக்குவரத்து கழகங்கள் செலுத்த வேண்டும்.
இந்த நிலுவை தொகையை செலுத்த உத்தரவிடக்கோரி, சுங்கச்சாவடிகளை பராமரிக்கும் நிறுவனங்கள் தரப்பில், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
வழக்குகளை விசாரித்த நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ், 'சுங்கக் கட்டண பாக்கி, 276 கோடி ரூபாயை செலுத்தி, பிரச்னைக்கு தீர்வு காண, மாநில போக்குவரத்துத் துறை எந்த நடவடிக்கையும் எடுக்காததால், நான்கு சுங்கச்சாவடிகள் வழியாக, வரும் 10ம் தேதி முதல் அரசு பஸ்களை அனுமதிக்கக் கூடாது' என, உத்தரவிட்டிருந்தார்.
இந்நிலையில், நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ் முன், கூடுதல் அட்வகேட் ஜெனரல் ஜெ.ரவீந்திரன் நேற்று ஆஜராகி, “இந்த பிரச்னை, மாநில போக்குவரத்து துறை கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டு, நீண்ட காலமாக நிலுவையில் உள்ள சுங்கச்சாவடி கட்டண பாக்கியை செலுத்துவது தொடர்பாக, இன்று ஒரு நல்ல தீர்வுடன் வருகிறோம்,” என்றார்.
இதை ஏற்ற நீதிபதி, இன்று காலை வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொள்வதாக தெரிவித்தார்.