ஓய்வுகால பணப்பலன் கோரி அரசு பஸ் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
ஓய்வுகால பணப்பலன் கோரி அரசு பஸ் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
UPDATED : ஆக 19, 2025 02:45 AM
ADDED : ஆக 19, 2025 02:42 AM

சென்னை : போக்குவரத்து கழகங்களில் பணி ஓய்வுபெற்ற தொழிலாளர்களுக்கு, 24 மாதங்களாக வழங்காமல் உள்ள பணப்பலன்கள் கேட்டு, சி.ஐ.டி.யு., சார்பில், மாநிலம் முழுதும் போராட்டம் நடத்தப்பட்டது.
தமிழக அரசு போக்கு வரத்து கழகங்களில் ஓய்வு பெற்றவர்களுக்கு, 24 மாதங்களாக நிலுவையில் உள்ள ஓய்வுகால பலன்கள் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, மாநிலம் முழுதும், 21 இடங்களில், போக்குவரத்து ஊழியர்கள், ஓய்வூதியர்கள் காத்திருப்பு போராட்டத்தை துவங்கி உள்ளனர்.
இதன் ஒரு பகுதியாக, சென்னையில் பல்லவன் இல்லம் முன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சி.ஐ.டி.யு., தொழிற்சங்கம் சார்பில் காத்திருப்பு போராட்டம் நேற்று நடந்தது.
இதை சி.ஐ.டி.யு., மாநில தலைவர் சவுந்தரராஜன் துவக்கி வைத்தார். சி.ஐ.டி. யு., பொதுச்செயலர் ஆறுமுக நயினார் உட்பட, 200க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.
இதில், சி.ஐ.டி.யு., மாநில தலைவர் சவுந்தரராஜன் கூறியதாவது:
போக்குவரத்து கழகங்களில் ஓய்வுபெற்ற, 3,500 பேருக்கு, 24 மாதங்களாக ஓய்வூதிய பலன் வழங்கப் படாமல் உள்ளன.
இதை விரைவாக வழங்க வேண்டும். ஓய்வூதியம் பெறுவோரின் பஞ்சப்படி, 55 சதவீதத்தில், 23 சதவீதம் தான் வழங்கப்பட்டுள்ளது; மீதம் 23 சதவீதம் வழங்க வேண்டியுள்ளது. கடந்த 2003ம் ஆண்டுக்கு பின், பணியில் சேர்ந்தவர்களுக்கு பழைய ஓய்வூதிய முறையை அமல்படுத்த வேண்டும்.
இறந்த தொழிலாளர் களின் பிள்ளைகளுக்கு வாரிசு வேலை முறையாக வழங்காமல் உள்ளது; 5,000 பேர் வரை வேலை இல்லாமல் உள்ளனர். அவர்களுக்கு வேலை கொடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.