திருச்சி எஸ்.ஆர்.எம்., ஹோட்டலை அரசு கையகப்படுத்தலாம்: ஐகோர்ட்
திருச்சி எஸ்.ஆர்.எம்., ஹோட்டலை அரசு கையகப்படுத்தலாம்: ஐகோர்ட்
ADDED : ஆக 09, 2025 02:10 AM
மதுரை:'திருச்சியில் குத்தகை நிலத்திலிருந்து வெளியேற்ற, எஸ்.ஆர்.எம்., ஹோட்டல் வளாகத்தை தமிழக அரசு கையகப் படுத்தியது சட்டவிரோதம்' என, உயர் நீதிமன்ற மதுரை கிளை தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவை, இரு நீதிபதிகள் அமர்வு ரத்து செய்தது.
திருச்சியில் தமிழக சுற்றுலா வளர்ச்சி கழகத்திற்கு சொந்தமான இடத்தில் எஸ்.ஆர்.எம்., குழும ஹோட்டல் குத்தகை காலம் முடிந்த பின்னும் தொடர்வது தொடர்பான அரசின் மேல் முறையீட்டு வழக்கை, உயர் நீதிமன்ற மதுரை கிளை நீதிபதிகள் ஏ.டி.ஜெகதீஷ் சந்திரா, ஆர்.பூர்ணிமா அமர்வு நேற்று முன்தினம் விசாரித்தது.
உரிமை இல்லை அரசின் தலைமை வழக்கறிஞர் பி.எஸ்.ராமன், கூடுதல் தலைமை வழக்கறிஞர்கள் ரவீந்திரன், வீரா கதிரவன், அரசு பிளீடர் திலக்குமார் ஆஜராகி வாதிட்டதாவது:
ஹோட்டல் நிர்வாகத்திற்குரிய குத்தகை காலம், 2024 ஜூன் 13ல் முடிவடைந்து, மறுநாள் அதிகாலை அதிகாரிகள் ஹோட்டலை கையகப்படுத்தினர். இதனால், ரிட் மனுக்களை தாக்கல் செய்ய ஹோட்டல் நிர்வாகத்திற்கு உரிமை இல்லை.
குத்தகை விதிகளை மீறி, வங்கியில் சொத்து அடமானம் வைக்கப்பட்டு, 56 கோடி ரூபாய் கடனை ஹோட்டல் நிர்வாகம் வாங்கியது.
குத்தகை தொகை, 40 கோடியை செலுத்த வேண்டிய கட்டாயத்தில் நிர்வாகம் உள்ளது. இதன் மூலம் நிர்வாகம் சுத்தமான கரங்களுடன் நீதிமன்றத்திற்கு வரவில்லை என்பது தெளிவாகிறது.
தேவையற்றது ஒப்பந்தம் காலாவதியாகும் போது, அவ்வளாகத்தின் மீதான தன் அனைத்து உரிமைகளையும் நிர்வாகம் இழக்கிறது. சொத்தின் மீதான உரிமையை அரசிடம் ஒப்படைக்க வேண்டிய கடமை நிர்வாகத்திற்கு உள்ளது.
இருப்பினும், தனி நீதிபதி ஹோட்டல் நிர்வாகம் கோரிய நிவாரணத்தை வழங்கியுள்ளார். அதை ரத்து செய்ய வேண்டும்.
இவ்வாறு வாதிட்டனர்.
நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு:
அரசு இயந்திரம் மற்றும் அதன் அதிகாரிகளை குறைவாக மதிப்பிடும் வகையில் தனி நீதிபதியின் உத்தரவில் தனிப்பட்ட கருத்துகளை தெரிவித்தது தேவையற்றது. அவை நீக்கப்படுகின்றன.
வழக்கின் முழு உண்மைகள், சூழ்நிலையை கருத்தில் கொண்டு, தனி நீதிபதியின் உத்தரவுகள் ரத்து செய்யப்படுகின்றன. அரசின் மேல்முறையீட்டு மனுக்கள் அனுமதிக்கப்படுகின்றன.
இவ்வாறு உத்தரவிட்டனர்.