சென்னையில் அரசு டாக்டருக்கு கத்திக்குத்து; சட்டப்படி நடவடிக்கை; அமைச்சர் மா.சு., உறுதி
சென்னையில் அரசு டாக்டருக்கு கத்திக்குத்து; சட்டப்படி நடவடிக்கை; அமைச்சர் மா.சு., உறுதி
UPDATED : நவ 13, 2024 05:11 PM
ADDED : நவ 13, 2024 11:52 AM
முழு விபரம்

சென்னை: சென்னையில் அரசு டாக்டரை கத்தியால் குத்திய சம்பவத்தில் இருவர் கைது செய்யப்பட்டனர். சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.
இதனிடையே, ஸ்டான்லி மருத்துவமனையில் மனநோய்க்கு சிகிச்சை அளித்த டாக்டர் ஹரிஹரன் மீது நோயாளி தாக்குதல் நடத்தியதாக போலீசில் புகார் அளிக்கப்பட்டு உள்ளது.
சென்னை கிண்டி அரசு மருத்துவமனையில் பணியில் இருந்த டாக்டர் பாலாஜியை கத்தியால் குத்தி உள்ளனர். இது தொடர்பாக நடத்தப்பட்ட முதற்கட்ட விசாரணையில் உடனடியாக 2 பேர் கைது செய்யப்பட்டனர். தாய்க்கு சரியாக சிகிச்சை அளிக்கவில்லை எனக்கூறி டாக்டரை தாக்கியது போலீசாரின் விசாரணையில் தெரியவந்தது. அரசு டாக்டரை கத்தியால் குத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
டாக்டர் பாலாஜியை கத்தியால் குத்திவிட்டு தப்பியோடிய எஞ்சிய இருவரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
இது தொடர்பாக, அமைச்சர் மா.சுப்பிரமணியன் சென்னையில் நிருபர்கள் சந்திப்பில் கூறியதாவது: கிண்டி அரசு மருத்துவமனையில் பணியிலிருந்த டாக்டர் கத்தியால் குத்தப்பட்ட சம்பவம் குறித்து விசாரணை நடத்தப்படுகிறது. இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.சிகிச்சைக்கு வந்த வட மாநிலத்தை சேர்ந்த 4 பேர் டாக்டர் மீது தாக்குதல் நடத்தி உள்ளனர். இந்த சம்பவத்தில் தொடர்புடைய மற்ற நபர்களையும் கைது செய்து சட்டப்படி நடவடிக்கை எடுப்போம். இவ்வாறு அவர் கூறினார்.
மா.சுப்பிரமணியன் ஆய்வு
மருத்துவமனையில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆய்வு செய்தார். பின்னர் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டி: தனது தாய்க்கு முறையாக சிகிச்சை அளிக்கவில்லை என்று தவறாகப் புரிந்து கொண்டு விக்னேஷ் என்பவர் டாக்டர் பாலாஜியை கத்தியால் குத்தியுள்ளார்.
டாக்டர் நலமுடன் உள்ளார். தீவிர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். நோயாளியுடன் வந்தவர் என்பதால் சம்பந்தப்பட்ட நபர் மீது சந்தேகம் வரவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.
வேலைநிறுத்தம்
டாக்டர் கத்தியால் குத்தப்பட்ட சம்பவத்தை கண்டித்து, காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட போவதாக அரசு டாக்டர்கள் சங்கம் அறிவித்துள்ளது.
உதயநிதி ஆய்வு
டாக்டர் மீதான கத்திக்குத்து சம்பவத்தை அடுத்து கிண்டி அரசு மருத்துவமனையில் துணை முதல்வர் உதயநிதி ஆய்வு செய்தார். பாதுகாப்பு உடை அணிந்து சிகிச்சையில் உள்ள டாக்டர் பாலாஜியை சந்தித்தார்.
பின்னர் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டி: கடந்த 6 மாதங்களாக விக்னேஷின் தாய்க்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், கோபத்தில் தவறான முடிவை எடுத்துள்ளார்.
டாக்டர் பாலாஜிக்கு தலையில் 4 இடங்களிலும், இடது கழுத்திலும், இடது தோள்பட்டை மற்றும் காது மடலிலும் காயம் ஏற்பட்டுள்ளது. சுகாதாரத்துறை அமைச்சர் இன்று மாலை அனைத்து டாக்டர்கள் சங்கங்களுடன் பேச்சுவார்த்தை நடத்துகிறார். டாக்டர் பாலாஜியின் உடல்நிலை தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது. இவ்வாறு உதயநிதி தெரிவித்தார்.