சென்னை மலர் கண்காட்சிக்காக பொங்கல் விடுமுறை நாளில் பணி; அரசு ஊழியர் சங்கம் கண்டனம்
சென்னை மலர் கண்காட்சிக்காக பொங்கல் விடுமுறை நாளில் பணி; அரசு ஊழியர் சங்கம் கண்டனம்
ADDED : ஜன 09, 2025 07:16 AM
கம்பம், : பொங்கல் விடுமுறை நாட்களில் சென்னையில் மலர் கண்காட்சி பணிக்கு தமிழகம் முழுவதும் உள்ள தோட்டக்கலைத்துறை பணியாளர்களுக்கு பணி ஒதுக்கீடு செய்துள்ளதற்கு அரசு ஊழியர் சங்கம் கண்டனம் தெரிவித்துஉள்ளது.
சங்கத்தின் மாநில தலைவர் தமிழ் செல்வி, பொதுச் செயலாளர் ஜெயராஜ ராஜேஸ்வரன் வெளியிட்டுள்ள அறிக்கை:
சென்னையில் தமிழக அரசின் தோட்டக்கலைத்துறை சார்பில் ஜன. 6 முதல் ஜன.11ம் தேதி வரை அறிவிக்கப்பட்ட மலர் கண்காட்சியை ஜன.19ம் தேதி வரை நீட்டித்துள்ளனர்.
கண்காட்சி பணிக்காக தமிழகம் முழுவதும் இருந்து தோட்டக்கலைத் துறை ஊழியர்களை சென்னைக்கு மாற்றுப் பணிக்கு வர உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
குறிப்பிட்ட நாட்களில் பொங்கல் பண்டிகை கொண்டாட்டங்கள் உள்ளன. மலர் கண்காட்சி பணிக்கு செல்லும் ஊழியர்கள் பொங்கல் கொண்டாட முடியாத சூழ்நிலை எழுந்துள்ளது.
இதனை தமிழக அரசின் ஊழியர் விரோத நடவடிக்கையாகவும், மத உணர்வுகளை அவமதிக்கும் செயலாக கருத வேண்டியுள்ளது. தமிழக அரசின் இந்த முடிவிற்கு தமிழக அரசு ஊழியர் சங்கம் கடும் ஆட்சேபனையை தெரிவிக்கிறது.
எனவே மலர் கண்காட்சியை பொங்கல் விடுப்பு நாட்களில் நடத்துவதை தமிழக அரசு கைவிட வேண்டும்.
இவ்வாறு தெரிவித்துஉள்ளனர்.

