கொடைக்கானல், ஊட்டியில் வாகன கட்டுப்பாடு உத்தரவை மறு ஆய்வு செய்ய அரசு வழக்கு
கொடைக்கானல், ஊட்டியில் வாகன கட்டுப்பாடு உத்தரவை மறு ஆய்வு செய்ய அரசு வழக்கு
ADDED : ஏப் 04, 2025 01:38 AM
சென்னை:ஊட்டி, கொடைக்கானலுக்கு செல்லும் சுற்றுலா வாகனங்களின் எண்ணிக்கைக்கு கட்டுப்பாடு விதித்து பிறப்பித்த உத்தரவை மறு ஆய்வு செய்யக்கோரி, தமிழக அரசு மனுத்தாக்கல் செய்துள்ளது. இந்த மனுவை இன்று விசாரிப்பதாக, உயர் நீதிமன்ற சிறப்பு அமர்வு தெரிவித்துள்ளது.
ஊட்டி, கொடைக்கானல் உள்ளிட்ட மலை வாசஸ்தலங்களில், எத்தனை சுற்றுலா வாகனங்களை அனுமதிக்கலாம் என்பது தொடர்பாக, சென்னை ஐ.ஐ.டி., மற்றும் பெங்களூரு ஐ.ஐ.எம்., கல்வி நிறுவனங்கள் ஆய்வு செய்து வருகின்றன.
போராட்டம்
இந்த ஆய்வுகள் நிறைவு பெற கால தாமதமாகும் என்பதால், கோடை விடுமுறையில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை தவிர்க்கும் வகையில், ஊட்டி மற்றும் கொடைக்கானலில் சுற்றுலா வாகனங்களுக்கு கட்டுப்பாடு விதித்து, சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் என்.சதீஷ்குமார், டி.பரத சக்ரவர்த்தி அடங்கிய சிறப்பு அமர்வு உத்தரவு பிறப்பித்தது.
ஊட்டிக்குள் வார நாட்களில், 6,000 வாகனங்கள், வார இறுதி நாட்களில் 8,000 வாகனங்கள்; கொடைக்கானலில் வார நாட்களில் 4,000, வார இறுதி நாட்களில் 6,000 வாகனங்களை மட்டுமே அனுமதிக்க வேண்டும் என்று உத்தரவிட்டிருந்தது.
இந்த வாகன கட்டுப்பாட்டுக்கு எதிர்ப்பு தெரிவித்து, ஊட்டியில் கடையடைப்பு போராட்டம் நடந்தது.
இந்நிலையில், வாகன கட்டுப்பாடு விதித்து பிறப்பிக்கப்பட்ட உத்தரவை மறு ஆய்வு செய்யக்கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில், தமிழக அரசு மனு தாக்கல் செய்துள்ளது.
அதன் விபரம்:
ஊட்டி, கொடைக்கானல் உள்ளிட்ட மலை வாசஸ்தலங்களில், எத்தனை சுற்றுலா வாகனங்களை அனுமதிக்கலாம் என்பது தொடர்பாக ஆய்வு செய்து வரும் சென்னை ஐ.ஐ.டி., மற்றும் பெங்களூரு ஐ.ஐ.எம்., கல்வி நிறுவனங்கள், அதன் ஆய்வை முடித்து அறிக்கை தாக்கல் செய்ய, ஒன்பது மாதங்களாகும்.
இதை நீதிமன்றம் கருத்தில் கொள்ள வேண்டும். நிபுணர் குழு கருத்து, தெளிவான தரவுகள் இல்லாத நிலையில், வாகனங்களுக்கு கட்டுப்பாடு விதிப்பது, உள்ளூர் மக்களின் வாழ்வாதாரமும், சுற்றுலா பயணியரை நம்பியிருக்கும் மக்களின் பொருளாதாரமும் பாதிக்கப்படும்.
வாகனங்களுக்கு கட்டுப்பாடு விதிப்பதால், உள்ளூர் மக்களுக்கு நிதி நெருக்கடி ஏற்படும். பெரும்பாலும் சுற்றுலா மற்றும் அது சார்ந்த தொழில்களை தான், உள்ளூர் மக்கள் நம்பியுள்ளனர்.
சுற்றுச்சூழலை பாதுகாப்பதில், அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட வேண்டும் என்பதில் சந்தேகமில்லை.
ஆனால், சுற்றுலா தொடர்பான நடவடிக்கைகளை சார்ந்திருப்பவர்களின் வாழ்வாதாரத்தையும் கருத்தில் கொள்ள வேண்டும். எனவே, வாகன கட்டுப்பாடு விதித்து, கடந்த மாதம் 13ல் இந்த நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை மறு ஆய்வு செய்ய வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
கோரிக்கை
இந்நிலையில், வன பாதுகாப்பு தொடர்பான வழக்குகளை, நீதிபதிகள் என்.சதீஷ்குமார், டி.பரத சக்கரவர்த்தி அடங்கிய அமர்வு விசாரித்து வந்தது.
அப்போது, கூடுதல் அட்வகேட் ஜெனரல் ஆஜராகி, ''ஊட்டி, கொடைக்கானலுக்கு செல்லும் வாகனங்களுக்கான கட்டுப்பாடு குறித்த உத்தரவை மறு ஆய்வு செய்யக்கோரி, அரசு தரப்பில் தாக்கல் செய்த மனுவை இன்று விசாரிக்க வேண்டும்,'' என்று கோரிக்கை விடுத்தார்.
அதை ஏற்ற நீதிபதிகள், அரசின் மறு ஆய்வு மனுவை இன்று விசாரிப்பதாக தெரிவித்தனர்.