ஆம்ஸ்ட்ராங் சிலைக்கு அனுமதி ஐகோர்ட்டில் அரசு தகவல்
ஆம்ஸ்ட்ராங் சிலைக்கு அனுமதி ஐகோர்ட்டில் அரசு தகவல்
ADDED : ஜூலை 04, 2025 10:44 PM
சென்னை:ஆம்ஸ்ட்ராங் முழு உருவ சிலையை, அவரது நினைவிடத்தில் வைக்க அனுமதி அளிக்கப்பட்டு உள்ளதாக, சென்னை உயர் நீதிமன்றத்தில், தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங், சென்னையில் கடந்தாண்டு ஜூலை 5ல் வெட்டி படுகொலை செய்யப்பட்டார்.
இந்த வழக்கில், ரவுடி நாகேந்திரன், அவரது மகன் அஸ்வத்தாமன், பொன்னை பாலு உட்பட, 27 பேரை, செம்பியம் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
ஆம்ஸ்ட்ராங் உடல் அடக்கம் செய்யப்பட்ட திருவள்ளூர் மாவட்டம், பொத்துார் நினைவிடத்தில், அவருக்கு முழு உருவ சிலை வைக்க அனுமதி கோரி, அவரது மனைவி பொற்கொடி, மாவட்ட கலெக்டரிடம் விண்ணப்பித்தார்.
எந்த பதிலும் இல்லாததால், சென்னை உயர் நீதிமன்றத்தில், பொற்கொடி வழக்கு தொடர்ந்தார். இந்த மனு, நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ் முன் விசாரணைக்கு வந்தது.
அப்போது, மாவட்ட கலெக்டர் சிலை வைக்க அனுமதி அளித்து உத்தரவிட்டுள்ளதாக கூறி, அதற்கான நகல் அரசு தரப்பில் தாக்கல் செய்யப்பட்டது.
இதையடுத்து, பொற்கொடி சார்பில் ஆஜரான வழக்கறிஞர் ஆர்.கிருஷ்ணகுமார், மனுவை திரும்ப பெறுவதாக கூறினார். இதை ஏற்ற நீதிபதி, மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.