'அரசு எங்களை வஞ்சிக்கிறது': சத்துணவு ஊழியர்கள் குமுறல்
'அரசு எங்களை வஞ்சிக்கிறது': சத்துணவு ஊழியர்கள் குமுறல்
ADDED : நவ 13, 2024 04:20 AM

சென்னை ; காலமுறை ஊதியம், குடும்ப நல ஓய்வூதியம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழகம் முழுதும் சத்துணவு ஊழியர்கள், நேற்று உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சென்னை சேப்பாக்கத்தில், மாவட்ட தலைவர் சித்ரகலா தலைமையில், நுாற்றுக்கும் மேற்பட்ட சத்துணவு ஊழியர்கள் உண்ணாவிரதம் இருந்தனர். அவர்கள் கூறியதாவது:
'சத்துணவு ஊழியர்களை அரசு ஊழியராக்கி, ஊதிய உயர்வு, பதவி உயர்வு வழங்கப்படும். ஐந்து லட்சம் ரூபாய் பணிக்கொடை வழங்கப்படும்' என, தி.மு.க.,வின் தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டது. ஆட்சிக்கு வந்த பின், எதையும் செய்யாமல், எங்களை தொடர்ந்து வஞ்சிக்கிறது.
சத்துணவு திட்டத்தில் சென்னையில், 1,800 பேர் பணியாற்றிய நிலையில், தற்போது, 1,200 பேர் தான் உள்ளனர்.
தமிழகம் முழுதும், 2 லட்சம் பேருக்கு மேல் பணியாற்றிய நிலையில், தற்போது, 60,000க்கும் மேற்பட்ட காலியிடங்கள் உள்ளன; 2018க்கு பின், காலியான இடங்களை அரசு நிரப்பவில்லை.
இதனால், ஒவ்வொரு ஊழியரும் ஐந்து சத்துணவு மையங்களுக்கான வேலையை பார்க்கின்றனர். காலியிடங்களை நிரப்பி, பதவி உயர்வு, ஊதிய உயர்வு வழங்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

