ADDED : மே 30, 2025 05:27 AM

சென்னை: நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிக்கை: 'தமிழிலிலிருந்து பிறந்ததுதான் கன்னடம்' என்ற வரலாற்றை கூறியதற்காக, நடிகர் கமலை, ஒரு சில கன்னட அமைப்புகள், கர்நாடகாவில் கமலை நுழைய விட மாட்டோம்; அவரது படங்களை திரையிட விட மாட்டோம் எனக்கூறி, அடிபணிய வைக்க நினைப்பது கண்டனத்துக்குரியது.
தமிழ்மொழி தோன்றி வளர்ந்த, பல ஆயிரம் ஆண்டுகளுக்குப் பின், அதிலிருந்து கிளைத்த மொழி கன்னடம் என்ற வரலாற்று உண்மையை ஏற்க மனமில்லாத கன்னட வெறியர்கள் தான் வன்முறை மிரட்டல்களை விடுக்கின்றனர்.
இதையடுத்து, கமலின், தக் லைப் படத்தை, கர்நாடகாவில் திரையிட மறுத்தால், அம்மாநில படங்களை, தமிழகத்தில் திரையிட அனுமதிக்க மாட்டோம் என எச்சரித்து, போராட்டத்தை முன்னெடுத்தால், அது முறையாக இருக்குமா? ஏன், ஆக்கப்பூர்வமான செயலாக இருக்குமா?
இங்கே தமிழர்கள் கோபம் அடைந்தால், ஒரு கன்னட படம் கூட திரையிட முடியாத சூழலை ஏற்படுத்த முடியும். தமிழக முதல்வரை அவமரியாதையாக நடத்தியபோது, மாநில அரசு மவுனமாக இருந்தது.
தற்போது கமலை அவமதிக்கும்போதும், வாய் திறக்காமல் அமைதியாக உள்ளது. இதன் வாயிலாக, கமலை மட்டும் அல்ல; தமிழ் மொழியையும் அரசு சேர்த்தே அவமதிக்கிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

