வீட்டுவசதி சங்க கட்டடங்கள் வாடகைக்கு விடுகிறது அரசு
வீட்டுவசதி சங்க கட்டடங்கள் வாடகைக்கு விடுகிறது அரசு
ADDED : ஆக 07, 2025 12:42 AM
சென்னை:கூட்டுறவு வீட்டுவசதி சங்கங்களின் கட்டடங்களுக்கு, பொதுப்பணித் துறை விலைப்பட்டியல் அடிப்படையில், வாடகை நிர்ணயிக்க, அரசு அனுமதி வழங்கி உள்ளது.
தமிழகத்தில் தற்போதைய நிலவரப்படி, 680 வீட்டுவசதி சங்கங்கள் செயல்படுகின்றன. இதில், வருவாய் இல்லாத சங்கங்களின் செலவுகளுக்கான நிதி ஆதாரத்தை திரட்ட வேண்டிய அவசியம் எழுந்துள்ளது. இதனால், கூட்டுறவு வீட்டுவசதி சங்கங்களிடம் பயன்படுத்தாமல் உள்ள நிலங்களை, ஏலம் வாயிலாக விற்கும் பணிகள் துவங்கின.
அடுத்தபடியாக கட்டடங்களை வாடகைக்கு விட, சங்கங்கள் முயற்சித்தன. இதற்கு வாடகை நிர்ணயிப்பதில் ஏற்பட்ட குழப்பத்தால், இப்பணிகள் முடங்கின.
இதுகுறித்து, கூட்டுறவு வீட்டுவசதி சங்க நிர்வாகி ஒருவர் கூறியதாவது:
வீட்டுவசதி சங்கங்களின் கட்டுப்பாட்டில் பயன்படுத்தப்படாமல், பல்வேறு மாவட்டங்களில், 100க்கும் மேற்பட்ட கட்டடங்கள் உள்ளன. இவற்றுக்கு எந்த அடிப்படையில் வாடகை நிர்ணயிப்பது என்பதில் குழப்பம் ஏற்பட்டது.
இது குறித்து, தமிழக அரசிடம் வழிகாட்டுதல் கேட்கப்பட்டது. பொதுப்பணித் துறையின் விலைப்பட்டியல் அடிப்படையில் வாடகை நிர்ணயிக்க, அரசு அறிவுரை வழங்கியுள்ளது. இதையடுத்து, கட்டடங்கள் வாடகைக்கு விடும் பணிகள் துவங்க உள்ளன.
இவ்வாறு அவர் கூறினார்.