கிலுகிலுப்பை காட்டுகிறது அரசு ஜாக்டோ - ஜியோ ஆவேசம்
கிலுகிலுப்பை காட்டுகிறது அரசு ஜாக்டோ - ஜியோ ஆவேசம்
ADDED : ஏப் 23, 2025 12:57 AM
சென்னை:பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, ஜாக்டோ - ஜியோ சார்பில், சென்னையில் பேரணி நடந்தது.
சென்னை எழும்பூரில் நடந்த பேரணியில், அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் பங்கேற்றனர். கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர். இது குறித்து, ஜாக்டோ - ஜியோ ஒருங்கிணைப்பாளர்கள் மாயவன் மற்றும் வெங்கடேசன் கூறியதாவது:
தி.மு.க., தேர்தல் வாக்குறுதியில் சொன்னபடி, பழைய ஒய்வூதிய திட்டத்தை நிறைவேற்ற வேண்டும். காலியாக உள்ள, 4.5 லட்சம் பணியிடங்களை, விரைவாக நிரப்ப வேண்டும்.
சரண் விடுப்பு சலுகையை வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை, நிறைவேற்ற வலியுறுத்தி வருகிறோம். இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
எங்களின் கோரிக்கை நியாயமானது என, எதிர்க்கட்சி தலைவராக இருக்கும் போது முதல்வர் ஸ்டாலின் சொன்னார். ஆனால், ஆட்சிக்கு வந்து நான்கு ஆண்டுகள் கடந்தும், எதையும் நிறைவேற்ற முயற்சிக்கவில்லை.
சட்டசபையில் பேசும் போது, இது குறித்து ஆலோசிக்கப்பட்டு வருவதாக தகவல் தெரிவிக்கின்றனர். ஆனால், ஆக்கப்பூர்வமான எந்த நடவடிக்கையும் இல்லை.
பசியுடன் துடிக்கும் குழந்தைக்கு, கிலுகிலுப்பை காட்டுவது போல, தமிழக அரசு எங்களை நடத்துகிறது. எங்கள் கோரிக்கைகளுக்கான அறிவிப்புகளை, சட்டசபையில் வெளியிட வேண்டும்.
சட்டசபையில் அரசு நிறைவேற்றும் தீர்மானங்களுக்கு, கவர்னர் மூன்று மாதத்திற்குள், ஒப்புதல் அளிக்க வேண்டும் என, உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
ஆனால், தி.மு.க., அரசு தந்த வாக்குறுதி ஐந்து ஆண்டை நெருங்குகிறது. இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
அடுத்த ஒரு வாரத்தில், பழைய ஓய்வூதிய திட்டத்தை அறிவிக்க வேண்டும். தவறினால், மே, 24ல் அனைத்து மாவட்டங்களிலும், வேலை நிறுத்தம் குறித்த மாநாடு நடத்துவோம்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.

