பாதிப்புடைய கர்ப்பிணியர் விபரம் 'பிக்மி' தளத்தில் பதிய அரசு உத்தரவு
பாதிப்புடைய கர்ப்பிணியர் விபரம் 'பிக்மி' தளத்தில் பதிய அரசு உத்தரவு
ADDED : டிச 18, 2024 12:38 AM
சென்னை:'உடல்நல பாதிப்பு அச்சுறுத்தல் உள்ள கர்ப்பிணியர் விபரங்களை, 'பிக்மி' இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும்' என, பொது சுகாதாரத் துறை உத்தரவிட்டுள்ளது.
மக்கள் நல்வாழ்வு துறை செயலர் சுப்ரியா சாஹு தலைமையில், சென்னையில் ஆய்வுக் கூட்டம் நடந்தது.
இதில், 'பிக்மி' இணையதளத்தில் கர்ப்பிணியர் விபரங்களை பதிவேற்றுவது குறித்து ஆலோசிக்கப்பட்டு முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன.
இதுகுறித்து, பொது சுகாதாரத்துறை இயக்குனர் செல்வவிநாயகம் கூறியதாவது:
பேறுகாலத்தில் உயிரிழப்பு ஏற்படுவதற்கு, பிரசவத்துக்கு பிந்தைய அதீத ரத்தப்போக்கு, உயர் ரத்த அழுத்த பாதிப்புகள், ரத்தத்தில் கிருமித்தொற்று, இதய பாதிப்பு போன்றவை முக்கிய காரணங்கள்.
இதைக் கருத்தில் வைத்து, மாநிலம் முழுதும் உள்ள கர்ப்பிணியரில் இணைநோய் உள்ளவர்கள்; பிரசவ கால உடல்நல பாதிப்புகளுக்கு ஆளானவர்கள்; பேறுகால சர்க்கரை நோயாளிகள் ஆகியோரை கண்டறிந்து, சீமாங் மையங்களுக்கு அல்லது அவர்கள் விருப்பத்துக்குரிய தனியார் மருத்துவமனைகளுக்கு அனுப்பி வருகிறோம்.
இதற்காக, அனைத்து மருத்துவ கட்டமைப்புகளிலும் ஒருங்கிணைப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது. 'பிக்மி' என்ற கர்ப்பிணியர் பதிவு தளத்தில், முன்கூட்டியே பிரசவ அச்சுறுத்தல் உள்ளவர்களின் விபரங்களை பதிவேற்ற, 900 மருத்துவமனைகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அதில், மருத்துவ பரிசோதனை ஆவணங்களை பதிவேற்றவும் உத்தரவிடப்பட்டுள்ளது. இதன் வாயிலாக, உயர் சிகிச்சை தேவைப்படக் கூடிய கர்ப்பிணியரை கண்டறிந்து, அவர்களின் பிரசவம் பாதுகாப்பாக நடக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.