29 அரசு துறைகளில் 9,677 தணிக்கை குறிப்புகள் நிலுவை விரைவாக பதில் அளிக்க அரசு உத்தரவு
29 அரசு துறைகளில் 9,677 தணிக்கை குறிப்புகள் நிலுவை விரைவாக பதில் அளிக்க அரசு உத்தரவு
ADDED : செப் 24, 2025 08:32 PM

சென்னை:தமிழகத்தில் 29 அரசு துறைகளில் நடத்தப்பட்ட தணிக்கையில், தணிக்கையாளர்கள் எழுப்பிய 9,677 கேள்விகள் மற்றும் ஆட்சேப குறிப்புகள் நிலுவையில் இருப்பது தெரிய வந்துள்ளது.
தமிழகத்தில் அரசு துறைகளின் நிதி சார்ந்த செயல்பாடுகளை, மத்திய கணக்கு தணிக்கை துறை ஆய்வு செய்கிறது. குறிப்பிட்ட கால இடைவெளியில், அந்தந்த துறைகளின் கோப்புகள், தணிக்கை துறையின் ஆய்வுக்கு அனுப்பப்படும்.
அவற்றை ஆய்வு செய்யும் போது, அரசுக்கு வர வேண்டிய நிதி வராமல் இருப்பது, நிதி இழப்பு, அரசு நிதி தவறாக செலவிடப்பட்டது போன்ற விஷயங்கள் கவனிக்கப்படும்.
இதுபோன்ற நிகழ்வுகள் தெரியவந்தால், அதுகுறித்து தணிக்கை அதிகாரிகள் கேள்வி எழுப்பியும், ஆட்சேபம் தெரிவித்தும் குறிப்பு எழுதுவர்.
அவற்றுக்கு, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள், எழுத்துப்பூர்வமாக பதில் அளிக்க வேண்டும். அந்தப் பதிலின் அடிப்படையில், தணிக்கை அறிக்கைகள் இறுதி செய்யப்படும்.
அதன்பின் கணக்கு தணிக்கை துறை அளிக்கும் இறுதி அறிக்கை, சட்டசபையில் வைக்கப்பட்டு மக்கள் பார்வைக்கு வரும்.
இந்நிலையில், தணிக்கை துறை எழுப்பிய, 9,677 கேள்விகளுக்கு, துறைகள் சார்பில் இன்னும் பதில் அளிக்கப்படாமல் உள்ளது.
இதுகுறித்து, வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி துறை உயரதிகாரி ஒருவர் கூறியதாவது:
தணிக்கை குறிப்புகள் நிலவரம் குறித்து அறிய, சமீபத்தில் துறை வாரியாக ஆய்வுக் கூட்டம் நடத்தப்பட்டது. அதில், கடந்த ஜூலை இறுதி நிலவரப்படி, 29 துறைகள் தொடர்பாக, 9,677 தணிக்கை துறை கேள்விகள் மற்றும் ஆட்சேப குறிப்புகள் நிலுவையில் உள்ளது தெரிய வந்துள்ளது.
இதுதவிர, பொது கணக்கு குழு உள்ளிட்ட அரசின் பல்வேறு குழுக்கள் எழுப்பிய கேள்விகள் மற்றும் குறிப்புகளும் நிலுவையில் உள்ளன. இந்த குறிப்புகளுக்கு பதில் அளிக்காமல் இருப்பது ஏன் என கேள்வி எழுப்பப்பட்டது.
அந்தந்த துறைகளில், கணக்கு தணிக்கை கேள்விகள் மற்றும் குறிப்புகளுக்கு பதில் அளிக்கும் பணிகளை விரைவுப்படுத்தவும் உத்தரவிடப்பட்டு உள்ளது.
இந்த விஷயத்தில் அளிக்கப்படும் பதில்கள் மற்றும் நடவடிக்கை எடுக்கப்பட்டதற்கான குறிப்புகளை, பொது கணக்கு குழு கேட்டுள்ளது.
எனவே, இது தொடர்பான பணிகளை முன்னுரிமை அடிப்படையில் மேற்கொள்ள உத்தரவிடப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.