யு.பி.எஸ்.சி., அனுப்பிய மூவர் பட்டியல் உச்ச நீதிமன்றத்தை நாட அரசு திட்டம்
யு.பி.எஸ்.சி., அனுப்பிய மூவர் பட்டியல் உச்ச நீதிமன்றத்தை நாட அரசு திட்டம்
ADDED : அக் 04, 2025 02:04 AM
சென்னை:காவல் துறை தலைவர் மற்றும் சட்டம் - ஒழுங்கு டி.ஜி.பி.,யை நியமனம் செய்வதற்கு மூன்று மூத்த ஐ.பி.எஸ்., அதிகாரிகளின் பெயர்களை பரிந்துரை செய்து யு.பி.எஸ்.சி., எனும் மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் தமிழக அரசுக்கு பட்டியல் அனுப்பி உள்ளது.
தமிழக காவல் துறை தலைவர் மற்றும் சட்டம் - ஒழுங்கு டி.ஜி.பி.,யாக இருந்த சங்கர் ஜிவால் கடந்த ஆக.31ல் ஓய்வு பெற்றார். இப்பணிக்கு புதிய டி.ஜி.பி.,யை தேர்வு செய்வதற்கான பட்டியலை யு.பி.எஸ்.சி., எனும் மத்திய அரசு பணியாளர் தேர்வாணையத்திற்கு தமிழக அரசு அனுப்பி வைத்தது. இதற்கிடையே பொறுப்பு டி.ஜி.பி.,யாக நிர்வாக பிரிவில் பணிபுரிந்த வெங்கட்ராமன் நியமனம் செய்யப்பட்டார்.
இந்நிலையில் தமிழக அரசு அனுப்பிய பட்டியல் அடிப்படையில் செப்.26ம் தேதி புதிய டி.ஜி.பி.,யை தேர்வு செய்வதற்கான கூட்டம் டில்லியில் நடந்தது. இதில் தமிழக அரசின் தலைமை செயலர் முருகானந்தம், உள்துறை செயலர் தீரஜ்குமார் உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்றனர்.
இக்கூட்டத்தில் நடத்தப்பட்ட ஆலோசனைக்கு பின் புதிய டி.ஜி.பி.,யை நியமனம் செய்ய மூத்த ஐ.பி.எஸ்., அதிகாரிகள் மூன்று பேரின் பெயர் பட்டியலை தமிழக அரசுக்கு யு.பி.எஸ்.சி., அனுப்பி உள்ளது. அதில் தீயணைப்பு துறை இயக்குநர் சீமா அகர்வால், ஆவின் விஜிலென்ஸ் முதன்மை அதிகாரி ராஜிவ்குமார், காவல் உயர் பயிற்சியகத்தின் இயக்குநர் சந்தீப்ராய் ரத்தோட் ஆகியோரின் பெயர்கள் இடம் பெற்றுள்ளன.
இவர்களில் ஒருவரை சட்டம் - ஒழுங்கு டி.ஜி.பி.,யாக தமிழக அரசு நியமனம் செய்ய வேண்டும் என யு.பி.எஸ்.சி., அறிவுறுத்தி உள்ளது.
இதுபற்றி ஐ.பி.எஸ்., அதிகாரிகள் கூறியதாவது:
டில்லியில் யு.பி.எஸ்.சி., அலுவலகத்தில் ஆலோசனை கூட்டம் நடந்தபோதே 'சீமா அகர்வால் சட்டம் - ஒழுங்கு பிரிவில் குறைந்த ஆண்டுகளே பணிபுரிந்துள்ளார். கூடவே அவர் சீருடை பணியாளர் தேர்வாணையத்தில் தலைவராக இருந்தபோது உதவி இன்ஸ்பெக்டர் தேர்வை முறையாக நடத்தவில்லை. சந்தீப் ராய் ரத்தோட் மீது விஜிலென்ஸ் விசாரணை நிலுவையில் உள்ளது.
அதேபோல ராஜிவ்குமார் மீதும் குற்றசாட்டுகள் உள்ளன. இதனால் தற்போது பொறுப்பு டி.ஜி.பி.,யாக உள்ள வெங்கட்ராமனை தேர்வு பட்டியலில் மூன்றாவது இடத்தில் வைக்க வேண்டும்' என்றெல்லாம் தமிழக அரசு சார்பில் கருத்துகள் முன்வைக்கப்பட்டன. அவற்றை யு.பி.எஸ்.சி., ஏற்க மறுத்துவிட்டது.
'பட்டியல் அனுப்பிவிட்டு பின் பட்டியலில் இடம்பெற்றோர் குறித்து குற்றச்சாட்டுகளை முன்வைப்பது சரியல்ல; ஏற்க முடியாது' என்றும் யு.பி.எஸ்.சி., தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
யு.பி.எஸ்.சி., அனுப்பிய பட்டியலில் உள்ள அதிகாரிகளில் யாரை டி.ஜி.பி.,யாக நியமனம் செய்யலாம் என்பது குறித்து முதல்வர், எதிர்க்கட்சி தலைவர் மற்றும் சபாநாயகர் பங்கேற்கும் கூட்டம் நடத்தி புதிய டி.ஜி.பி.,யை தேர்வு செய்ய வேண்டும்.
இக்கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவு குறித்து கவர்னருக்கு தெரிவிக்க வேண்டும். ஆனால் இந்த நடைமுறையை அமல்படுத்த ஆட்சி மேலிடத்தில் இருப்போருக்கு விருப்பம் இல்லை. அதனால் யு.பி.எஸ்.சி., அனுப்பிய பட்டியலை எதிர்த்து தமிழக அரசு சார்பி ல் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யலாமா என யோசித்து வருகின்றனர். இவ்வாறு அவர்கள் கூறி னர்.