ஒரு மதத்தின் சொத்து மற்றும் நிர்வாகத்தில் அரசு தலையிடக்கூடாது: சிதம்பரம் பேச்சு
ஒரு மதத்தின் சொத்து மற்றும் நிர்வாகத்தில் அரசு தலையிடக்கூடாது: சிதம்பரம் பேச்சு
ADDED : ஏப் 07, 2025 01:10 AM

சென்னை: ''ஒரு மதத்தின் சொத்து, வழிபாடு மற்றும் நிர்வாகத்தில் அரசு தலையிடக்கூடாது. எனவே, வக்ப் திருத்த சட்டம் செல்லாது என உச்ச நீதிமன்றம் அறிவிக்கும்,'' என்று, முன்னாள் மத்திய அமைச்சர் சிதம்பரம் கூறினார்.
வக்ப் திருத்த சட்டத்திற்கும், பிரதமர் மோடியின் தமிழக வருகைக்கும் எதிர்ப்பு தெரிவித்து, காங்கிரஸ் கட்சி சார்பில் நேற்று சென்னை சைதாப்பேட்டையில் கருப்புக்கொடி ஆர்ப்பாட்டம் நடந்தது. மாநில தலைவர் செல்வப்பெருந்தகை தலைமை வகித்தார்.
ஆர்ப்பாட்டத்தில் சிதம்பரம் பேசியதாவது:
பழைய வக்ப் சட்டத்தில், யார் வேண்டுமானாலும் நிலம் தானமாக வழங்கலாம். இதை நீதிமன்றமே அனுமதித்து உள்ளது.
முஸ்லிம்கள் இடுகாட்டிற்கு, பணம் மற்றும் நிலம் போன்றவற்றை நானே கொடுக்கலாம். ஆனால், இனிமேல் என்னால்கூட கொடுக்க முடியாது.
இனிமேல் பத்திரம் வாயிலாகவே கொடுக்க முடியும். அதுவும், ஐந்து ஆண்டுகளாக முஸ்லிம் மதத்தை பின்பற்றுபவர் தான், பத்திரம் எழுத முடியும். இது, ஹிந்துக்கள் மற்றும் கிறிஸ்துவர்களுக்கு இல்லாத விதி.
புதிய வக்ப் திருத்த சட்டத்தின்படி, முஸ்லிம் அல்லாதவர்கள் குழுவில் நியமிக்கப்படலாம். ஹிந்து கோவில் அறங்காவலர்களாக முஸ்லிம்களை நியமிக்க முடியுமா?
திருப்பதி தேவஸ்தான நிர்வாகத்தில் ஹிந்துக்கள் மட்டுமே உள்ளனர். ஆனால், பணியாளர்களாக மற்ற மதத்தினரும் இருந்தனர். இனிமேல் பணியாளர்களில் ஹிந்துக்கள் மட்டுமே இருக்க வேண்டும் என ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு அறிவித்துள்ளார்.
தே.ஜ., கூட்டணியில் அங்கம் வகிக்கும் சந்திரபாபு நாயுடு அறிவித்துள்ள நிலையில், வக்ப் வாரியத்தில் மட்டும் எப்படி ஹிந்துக்களை நியமிக்க முடியும்?
ஒரு மதத்தின் சொத்து, வழிபாடு, நிர்வாகத்தில் அரசு தலையிடக்கூடாது. அரசு தலையிடுவது மிகப்பெரிய பிழை.
இந்த சட்டம் செல்லாது என உச்ச நீதிமன்றம் அறிவிக்கும். மத சார்பற்ற இந்திய நாட்டில், ஹிந்து ராஷ்ட்ரா என்ற தவறான கொள்கையை கொண்டு வர, பா.ஜ., மற்றும் ஆர்.எஸ்.எஸ்., முயற்சிக்கின்றன.
இவ்வாறு அவர் பேசினார்.

