த.வெ.க., தலைமையில் தான் ஆட்சி: 'இப்தார்' நிகழ்ச்சியில் விஜய் உறுதி
த.வெ.க., தலைமையில் தான் ஆட்சி: 'இப்தார்' நிகழ்ச்சியில் விஜய் உறுதி
ADDED : மார் 19, 2026 06:14 AM

சென்னை: த.வெ.க., சார்பில், 'இப்தார்' நோன்பு திறப்பு நிகழ்ச்சி, சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் நேற்று மாலை நடந்தது. அதில் பங்கேற்ற பின், விஜய் பேசியதாவது:
நான் அரசியலுக்கு வந்ததில் இருந்தே, 'அந்த டீம்; இந்த டீம்' என வதந்தி, அவதுாறு பரப்புகின்றனர். நான் எந்த டீமும் இல்லை. மக்களுடைய டீம் என எல்லாருக்கும் தெரிந்த பின், வேறு என்ன அவதுாறு சொல்லலாம் என முயற்சி செய்தனர்; ஆனால், எதுவும் நடக்கவில்லை.
கடைசியாக இந்த விஜயை என்னதான் செய்யலாம் என நினைக்கும்போது, அந்த கூட்டணியில் சேர போகிறார் என, பொய்யான பிரசாரத்தை செய்தனர்.
மதச்சார்பற்ற சமூக நீதி என்பதில், த.வெ.க., உறுதியாக உள்ளது. அதில் சமரசமே இல்லை. தமிழகத்தில், த.வெ.க., தலைமையில்தான் ஆட்சி என்பதில் உறுதியாக உள்ளேன். யாருக்காகவும் எதற்காகவும், நான் சமரசம் செய்ய மாட்டேன்; எந்த பேச்சும் கிடையாது.
யார் என்ன அவதுாறு பரப்பினாலும், அதை நம்பாதீர்கள். நமது இலக்கை நம்மால் அடைய முடியும். இவ்வாறு அவர் பேசினார்.
'த.வெ.க., தலைமையை ஏற்று வந்தால், கூட்டணிக்கு சம்மதம் என்பதைதான் விஜய் பேசி உள்ளார். எனவே தான், பா.ஜ., - அ.தி.மு.க., ஆகிய கட்சிகளின் பெயரைக்கூட விஜய் குறிப்பிடவில்லை' என, த.வெ.க., நிர்வாகிகள் சிலர் தெரிவித்தனர்.
கடந்த முறை, சென்னை ராயப்பேட்டையில் நடந்த இப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சியில், முஸ்லிம் ஆண்கள் அணிவதுபோல், வெள்ளை வேட்டியில் விஜய் வந்தார். ஆனால், இம்முறை வழக்கமான வெள்ளை சட்டை, காக்கி பேன்ட்டில்தான் விஜய் வந்திருந்தார்.

