துணை வேந்தர் நியமன விவகாரம் கவர்னர் - அமைச்சர் மல்லுக்கட்டு
துணை வேந்தர் நியமன விவகாரம் கவர்னர் - அமைச்சர் மல்லுக்கட்டு
ADDED : டிச 21, 2024 12:18 AM
சென்னை:'துணை வேந்தர்களை நியமிக்க, தமிழக அரசால் நியமிக்கப்பட்டுள்ள தேடல் குழுவில், யு.ஜி.சி.,யின் நிர்வாகி இடம் பெற வேண்டும்' என, தமிழக அரசுக்கு கவர்னர் ரவி மீண்டும் அறிவுறுத்தி உள்ளார்.
தமிழகத்தில் உள்ள அண்ணா பல்கலை, பாரதிதாசன் பல்கலை, பெரியார் பல்கலைகளுக்கு துணை வேந்தர்களை நியமிக்க, தமிழக அரசு மூவர் அடங்கிய தேடல் குழுவை அமைத்து, கவர்னரின் ஒப்புதலுக்கு அனுப்பியது.
அதற்கு பதில், கவர்னர், நால்வர் அடங்கிய தேர்வுக் குழு அமைத்து, புதிய பட்டியலை வெளியிட்டார். இதுகுறித்து, தமிழக அரசு வழக்கு தொடர்ந்துள்ளது.
இந்நிலையில், 'மாநில அரசின் கட்டுப்பாட்டில் உள்ள பல்கலைகளின் துணை வேந்தர்கள் நியமனத்தில், பல்கலை மானிய குழுவான யு.ஜி.சி., விதிமுறைகள் முழுதும் பின்பற்றப்படுவது அவசியம் இல்லை.
அதனால், துணை வேந்தர் நியமனத்தை தாமதிக்காமல், அரசின் தேர்வு குழுவுக்கு கவர்னர் ஒப்புதல் அளிக்க வேண்டும்' என, உயர் கல்வி துறை அமைச்சர் கோவி.செழியன், நேற்று முன்தினம் கூறியிருந்தார்.
அதற்கு மறுப்பு தெரிவிக்கும் வகையில், கவர்னர் மாளிகை நேற்று வெளியிட்ட அறிக்கை:
மாநில பல்கலைகளின் வேந்தரான கவர்னர், தகுதியான துணை வேந்தர்களை நியமிக்கும் வகையில், பல்கலை, யு.ஜி.சி., விதிகள் மற்றும் உச்ச நீதிமன்ற உத்தரவை பின்பற்றி, தேடல் குழுவை அமைத்திருந்தார்.
அதில், கவர்னரின் உறுப்பினர், தமிழக அரசு உறுப்பினர், பல்கலை ஆட்சிமன்ற குழு உறுப்பினர், யு.ஜி.சி., உறுப்பினர் ஆகியோர் இடம் பெற்றனர்.
அதாவது, உச்ச நீதிமன்ற தீர்ப்பில், யு.ஜி.சி., தலைவர் பரிந்துரைக்கும் உறுப்பினர் இடம் பெற வேண்டும் என்பது கட்டாயம் ஆகியுள்ளது.
சட்ட விதிமுறைகளுக்கு உட்பட்டு செயல்படும் வேந்தரான கவர்னர், பாரபட்சமற்ற தேர்வு முறையை உறுதி செய்யவே இந்த முடிவை எடுத்திருந்தார். அதை அறிவிக்கை செய்யும்படியும், தமிழக அரசுக்கு உத்தரவிட்டிருந்தார்.
இந்நிலையில், உச்ச நீதிமன்ற தீர்ப்பை மீறி, தமிழக அரசு, யு.ஜி.சி., உறுப்பினரை நீக்கி அரசாணை வெளியிட்டுள்ளது. அதை, நீதிமன்றம் ரத்து செய்யும்.
இந்நிலையில், உயர் கல்வி துறை அமைச்சரின் அறிக்கையில், உண்மைக்கு புறம்பான தகவல்கள் உள்ளன. அதனால், அரசு வெளியிட்ட தேடல் குழு அரசாணைகளை ரத்து செய்வதுடன், கவர்னர் பரிந்துரைத்த தேடல் குழுவை அறிவிக்கை செய்ய வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.