'எக்ஸ்' தளத்தில் பதிவிட்டு அவமானப்படுத்தும் கவர்னர்: சபாநாயகர் அப்பாவு கண்டனம்
'எக்ஸ்' தளத்தில் பதிவிட்டு அவமானப்படுத்தும் கவர்னர்: சபாநாயகர் அப்பாவு கண்டனம்
ADDED : ஜன 09, 2025 06:33 AM
சென்னை: தமிழக மக்களை கவர்னர் ரவி அவமதித்துஉள்ளதாகக் கூறி, சபாநாயகர் அப்பாவு கண்டனம் தெரிவித்தார்.
சட்டசபையில் நேற்று அவர் அளித்த விளக்கம்:
தமிழக சட்டசபையில், கவர்னர் உரை நேரலை செய்யப்படாதது குறித்து, கவர்னர் ரவி, 'எக்ஸ்' வலைதளத்தில் தன் கருத்தை பதிவிட்டுள்ளார்.
நான் சபாநாயகராக பொறுப்பேற்ற பிறகு, 2022 ஜன., 5 முதல் மே 10 வரை நடந்த சட்டசபையின் முக்கிய நிகழ்வுகள், நேரலை செய்யப்பட்டன. இதற்காக சென்னை தொலைக்காட்சி நிறுவனத்திற்கு, 44.65 லட்சம் ரூபாய் வழங்கப்பட்டது.
அடுத்து 2022 அக்.,17 முதல் நடந்த, சட்டசபை கூட்டத்தை நேரலை செய்ய, சென்னை தொலைக்காட்சிக்கு கடிதம் அனுப்பப்பட்டது.
அதற்கு, 'வி.வி.ஐ.பி., நிகழ்ச்சி இருப்பதாலும், நேரலை செய்யும் வேன் கிடைக்காததாலும், நேரலை செய்ய இயலாது' என, தெரிவித்தனர். கடந்த 2023ம் ஆண்டிலும், நேரலை செய்ய மறுத்து விட்டது.
சட்டசபை கண்டிக்கிறது
இதுகுறித்து விசாரித்தபோது, குஜராத் தேர்தல் பிரசாரத்திற்கு சென்றது தெரிய வந்தது. அதனால், இம்முறை கவர்னர் உரையை நேரலை செய்ய, சென்னை தொலைக்காட்சிக்கு அனுமதி வழங்கவில்லை.
கடந்த 6ம் தேதி, கவர்னர் உரையாற்ற வருவதற்கு முன்பு, சென்னை தொலைக்காட்சி, அகில இந்திய வானொலி நிலையத்தினர் வந்தனர்.
விசாரித்தபோது, கவர்னர் வரும்போது வந்து, காட்சிகளை படம் பிடித்து, அவர்கள் நினைத்தபடி, வெட்டி ஒட்டி அனுப்புவது வழக்கம் என்பது தெரிந்தது.
சென்னை தொலைக்காட்சிக்கு பதிலாக, இப்போது டி.ஐ.பி.ஆர்., நிறுவனம், சட்டசபை நிகழ்வுகளை நேரலை செய்கிறது. சென்னை தொலைக்காட்சி வாயிலாக படம் பிடித்து, அதை வெட்டி, ஒட்டி ஏதாவது செய்யலாம் என நினைத்து, கவர்னர் வந்துஉள்ளார்.
அதை கண்டுபிடித்து, சட்டசபையை நெருக்கடியில் இருந்து, தமிழக அரசு மீட்டுள்ளது. அது நடக்கவில்லை என்பதால்தான், 'எக்ஸ்' தளத்தில் பதிவிட்டு, தமிழக மக்களையும், தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.எல்.ஏ.,க்களையும், கவர்னர் அவமதித்துள்ளார். இதை சட்டசபை கண்டிக்கிறது.
கருப்பு பேட்ஜ்
அமைச்சரவை எழுதிக் கொடுப்பதை, வாசிப்பதுதான் கவர்னரின் கடமை. தேசிய கீதத்தை முதலில் பாடுங்கள் என, கோரிக்கை வைக்க உரிமை இல்லை. ஆயிரம் ரூபாய் வேண்டும் என, சாதாரண மக்கள்தான் கோரிக்கை வைப்பர்; கவர்னர் கோரிக்கை வைக்க முடியாது.
அவசர நிலை காலத்தை நினைவூட்டுவதாக கவர்னர் கூறியிருக்கிறார். அவர் வந்தபோது, பிரதான எதிர்க்கட்சியினர் பதாகைகளை ஏந்தி, முன்னால் வந்து நின்றனர். காங்கிரஸ் கட்சியினரும் கருப்பு பேட்ஜ் அணிந்து வந்தனர். கவர்னரை பேச விடாமல் அ.தி.மு.க.,வினரும், காங்கிரஸ் உறுப்பினர்களும் நின்றனர்.
அவருக்கு நெருக்கடி வந்து விடக்கூடாது என்பதற்காக, நேரலை செய்ய வேண்டாம் என்றேன். பதாகைகளை காட்டி, அ.தி.மு.க.,வினர் நெருக்கடி கொடுத்தனர். அதனால்தான் கவர்னர் வெளியேறினார்.
இவ்வாறு அவர் கூறினார்.