ADDED : செப் 22, 2024 01:05 AM
சென்னை:வன உயிரின பாதுகாப்பில் சிறந்த பங்களிப்பை வழங்கிய வன உயிரின ஆர்வலருக்கு, 25 லட்சம் ரூபாய் பரிசு தொகையுடன், 'டாக்டர் ஏ.ஜே.டி.ஜான் சிங் வன உயிரின பாதுகாப்பு விருது' வழங்க, தமிழக அரசு அனுமதி அளித்து உள்ளது.
இந்தியாவின் தலைசிறந்த வன உயிரின உயிரியலாளரும், தமிழகத்தைச் சேர்ந்த வனப் பாதுகாப்பு அலுவலருமான டாக்டர் ஏ.ஜே.டி.ஜான் சிங், தன் வாழ்நாள் முழுதும் வன உயிரின பாதுகாப்புக்கு பாடுபட்டார். அவரது பங்களிப்பை அங்கீகரிக்கும் வகையில், ஒவ்வொரு ஆண்டும் வன உயிரின ஆர்வலர் ஒருவருக்கு, 'டாக்டர் ஏ.ஜே.டி.ஜான் சிங் வன உயிரின பாதுகாப்பு விருது' வழங்கப்படும் என, சட்டசபையில் அறிவிக்கப்பட்டது.
அதன்படி விருது வழங்கவும், விருதாளருக்கு 25 லட்சம் ரூபாய் பரிசு தொகை, பாராட்டு பத்திரம் வழங்கவும் தமிழக அரசு அனுமதி வழங்கி உள்ளது. விருதாளரை தேர்வு செய்ய, இரண்டு குழுக்களை அமைத்து தமிழக அரசு உத்தரவிட்டு உள்ளது. இதற்கான அரசாணையை, வனத்துறை செயலர் செந்தில்குமார் வெளியிட்டுள்ளார்.