ஆசிரியர் பணிக்காக 12 ஆண்டுகளாக காத்திருக்கும் பட்டதாரிகள் ஆர்ப்பாட்டம்
ஆசிரியர் பணிக்காக 12 ஆண்டுகளாக காத்திருக்கும் பட்டதாரிகள் ஆர்ப்பாட்டம்
ADDED : பிப் 20, 2025 12:40 AM
சென்னை:ஆசிரியர் தகுதித் தேர்வு எழுதி, 12 ஆண்டுகளுக்கு மேலாக காத்திருக்கும் பட்டதாரிகள், பள்ளிகளில் காலிப் பணியிடங்களை நிரப்ப வலியுறுத்தி, சென்னையில் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
சென்னை, நுங்கம்பாக்கத்தில் உள்ள, பள்ளிக் கல்வித்துறை தலைமை வளாகம் அருகே நடந்த ஆர்ப்பாட்டத்தில், கோரிக்கையை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.
இதுகுறித்து, ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்ற அனுஷியா கூறியதாவது:
கடந்த 2013ல், ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்று, பணி வேண்டி, 12 ஆண்டுகளுக்கு மேலாக காத்திருக்கிறோம். கடந்த 2022ல், ஆசிரியர் தகுதித் தேர்வு எழுதி காத்திருப்போர், புதிய அரசாணையின்படி, ஆசிரியர் நியமன தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும் என, தமிழக அரசு அறிவித்தது.
அதன்படி, கடந்தாண்டு நடத்தப்பட்ட ஆசிரியர் நியமனக் தேர்வையும் எழுதி, அதிக மதிப்பெண்களில் தேர்ச்சி பெற்றுள்ளோம். ஆனால், தேர்ச்சி பெற்ற அனைவருக்கும் பணி வழங்காமல், மாறாக 2,000க்கும் மேற்பட்டவர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இது 12 ஆண்டுகளுக்கு மேலாக காத்திருப்போருக்கு ஏமாற்றத்தை அளித்துள்ளது.
தற்போது அரசு பள்ளிகளில், 10,-000க்கும் மேற்பட்ட ஆசிரியர் காலிப்பணியிடங்கள் உள்ளதால், அங்கு பயிலும் மாணவர்களின் கல்வி த்தரம் கேள்விக்குறியாகி உள்ளது. மேலும், தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்ற பட்டதாரிகளை நியமித்து, காலிப்பணியிடங்களை நிரப்பாமல், 5,000ற்கும் மேற்பட்ட தற்காலிக ஆசிரியர்களுக்கு, அரசு பணி வழங்கி உள்ளது வேதனையாக உள்ளது.
எனவே, அனைத்து வகையான தகுதித் தேர்விலும் தேர்ச்சி பெற்று, 12 ஆண்டுகளாக காத்திருக்கும் பட்டதாரிகளை வஞ்சிக்காமல், காலிப் பணியிடங்களில் எங்களை பணியமர்த்த வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.

