UPDATED : அக் 07, 2026 09:17 PM
ADDED : அக் 07, 2026 09:15 PM
(முகம் படம்
சென்னை: சிறுமியரை பாலியல் வன்முறை செய்த வழக்கில் கைதாகி, சிறையில் அடைக்கப்பட்டுள்ள, கிரானைட் வீரமணி, 85, மற்றொரு வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார்.
சிறுமியரை பாலியல் வன்முறை செய்தததாகவும், தற்கொலைக்கு துாண்டியதாகவும், கிரானைட் வீரமணி மீது, 15க்கும் மேற்பட்டோர் புகார் அளித்துள்ளனர். இது தொடர்பாக, சிறப்பு புலனாய்வு குழு அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர். ஏற்கனவே, சிறுமியரை பாலியல் வன்முறை செய்ததாக, போக்சோ வழக்கில், அவர் கைது செய்யப்பட்டு, சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
நேற்று, மற்றொரு போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்டார். இன்னும் மூன்று வழக்குகளில், கைது செய்யப்பட உள்ளார் என, போலீசார் தெரிவித்தனர். இதற்கிடையே, மதுரையை சேர்ந்த சிறுமி ஒருவரும், வீரமணியால் பாலியல் வன்முறைக்கு ஆளானதாக, சிறப்பு புலனாய்வு குழு அதிகாரிகளிடம் புகார் அளித்துள்ளார்.
சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில், போக்சோ வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில், நேற்று நீதிபதி பத்மா முன், வீரமணி ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது, அவரது நீதிமன்ற காவல், வரும், 21ம் தேதி வரை நீடித்து உத்தரவிடப்பட்டது.
இந்நிலையில், வீரமணி மீதான வழக்கு விசாரணையை, சி.பி.ஐ.,க்கு மாற்ற கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில், தாம்பரம் பகுதியை சேர்ந்த வாராகி என்பவர் மனு தாக்கல் செய்தார்.
இந்த மனு நேற்று, நீதிபதி வி.லட்சுமி நாராயணன் முன் விசாரணைக்கு வந்தபோது, சிறப்பு புலனாய்வு குழு தரப்பில், ‘வழக்கின் விசாரணையில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் உள்ளது’ என, விசாரணை நிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.
அப்போது நீதிபதி, விசாரணை முறையாக நடந்து வருவதால், சி.பி.ஐ., விசாரணை தேவையில்லை. வழக்கை போக்சோ சிறப்பு நீதிமன்ற நீதிபதி எஸ்.பத்மா சிறப்பாக விசாரித்து வருகிறார் என பாராட்டு தெரிவித்து, காவல் துறை தரப்பில் அடுத்த கட்ட அறிக்கை தாக்கல் செய்ய, அவகாசம் வழங்கி, விசாரணையை அக்., 26க்கு தள்ளி வைத்தார்.
