தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/தமிழகம்/ஈ.வெ.ரா., பெயரிலான நுாலகத்திற்கான நுால்களை முந்தைய தி.மு.க., அரசு வாங்கியதில் 'மிகப் பெரிய ஊழல்!': மோசடியை ஆதாரத்துடன் புட்டு புட்டு வைக்கிறார் எழுத்தாளர் பெருமாள் முருகன்

ஈ.வெ.ரா., பெயரிலான நுாலகத்திற்கான நுால்களை முந்தைய தி.மு.க., அரசு வாங்கியதில் 'மிகப் பெரிய ஊழல்!': மோசடியை ஆதாரத்துடன் புட்டு புட்டு வைக்கிறார் எழுத்தாளர் பெருமாள் முருகன்

ஈ.வெ.ரா., பெயரிலான நுாலகத்திற்கான நுால்களை முந்தைய தி.மு.க., அரசு வாங்கியதில் 'மிகப் பெரிய ஊழல்!': மோசடியை ஆதாரத்துடன் புட்டு புட்டு வைக்கிறார் எழுத்தாளர் பெருமாள் முருகன்

18


UPDATED : நவ 07, 2026 12:47 AM

ADDED : நவ 06, 2026 08:18 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 07, 2026 12:47 AM ADDED : நவ 06, 2026 08:18 PM

18


18
Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சென்னை: கோவை ஈ.வெ.ரா., நுாலகத்திற்கு, கடந்த தி.மு.க., ஆட்சியில் புத்தகங்கள் வாங்கப்பட்டதில், மிகப்பெரிய ஊழல் நடந்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. போலி பெயர்களில், செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்ப உதவியுடன் எழுதப்பட்ட நுால்கள் வாங்கப்பட்டு உள்ளதாக, எழுத்தாளர் பெருமாள் முருகன், இந்த மோசடியை புட்டு புட்டு வைத்துள்ளார். இந்த ஊழல் குறித்த விசாரணை தொடங்கப்பட்டு உள்ளதாக, அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்துள்ளார்.

கோவையில், 300 கோடி ரூபாய் செலவில், 'பெரியார் அறிவுலகம்' என்ற பெயரில் பிரமாண்ட நுாலகம் கட்டப்பட்டு உள்ளது. கடந்த தி.மு.க., ஆட்சியில் கட்டப்பட்ட இந்நுாலகத்தை, கடந்த மாதம் 16ம் தேதி, முதல்வர் விஜய் திறந்து வைத்தார். இந்த நுாலகத்துக்கு, நுால்கள் கொள்முதல் செய்யப்பட்டதில் மிகப்பெரிய ஊழல் நடந்திருப்பதாக, எழுத்தாளர் பெருமாள் முருகன் குற்றம்சாட்டியுள்ளார்.

2,000 புத்தகங்கள்


இதுகுறித்து, நாமக்கல்லில் அவர் அளித்த பேட்டி: கோவையில், 'பெரியார் அறிவுலகம்' என்ற பெயரில் பிரமாண்ட நுாலகம் திறக்கப்பட்டுள்ளது. அந்த நுாலகத்திற்கு வாங்கிய புத்தக கொள்முதலில் ஊழல் நடந்துள்ளது. ஒரு எழுத்தாளராக நான் கண்ட காட்சி, அந்த கருத்தை முன்வைக்க விரும்புகிறேன். இதை யார் செய்திருப்பர் என்று தெரியாது; பார்வைக்கு வைத்திருக்கும் தமிழ் நுால்களை பார்வையிடும்போதே, கட்டாயம் ஊழல் நடந்துள்ளது என்பது தெரிகிறது.

'அகல் விளக்கு' என்ற பதிப்பகம் வெளியிட்ட, 2,000 புத்தகங்கள் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளன. தமிழகத்தில், நுாற்றுக்கும் அதிகமான பதிப்பகங்கள் இருக்கும் நிலையில், குறிப்பாக ஒரு பதிப்பகத்தின், 2,000 புத்தகங்கள் அலமாரியில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. அவற்றில், ஒவ்வொரு புத்தகமும் அதிக விலையை கொண்டுள்ளது. நுாறு பக்கம் கொண்ட புத்தகத்திற்கு, 150 ரூபாய் என, விலை வைப்பர்; மிகவும் பிரபலமான எழுத்தாளராக இருந்தால், 200 ரூபாய் வைப்பர். ஆனால், ஐந்து மடங்கு விலை வைத்துள்ளனர். 300 ரூபாய் புத்தகத்திற்கு, 1,500 ரூபாய் விலை வைத்துள்ளனர்.

மேலும், பெரும்பாலும் இங்குள்ள எந்த புத்தகத்திற்கும், 1,000 ரூபாய்க்கு குறைவான விலையே இல்லை. ஒரே பதிப்பகத்தில் இருந்து, 2,000 புத்தகங்கள் கொடுத்துள்ளனர். அந்த புத்தகங்கள் தரமாகவும் இல்லை. ஏ.ஐ., எனும் செயற்கை நுண்ணறிவு திறனால் உருவாக்கப்பட்ட போலி நுால்கள் என தெரிகிறது.

மோசடி புத்தகங்கள் என்றுதான் அவற்றை நாம் குறிப்பிட்டு சொல்ல வேண்டி உள்ளது. அவற்றில் இருக்கும் தகவல்கள் அனைத்தும், மொழிநடை தமிழ்போல இல்லை. அதன் ஆசிரியர்கள், இதுவரை எந்த நுாலும் எழுதியதாக தெரியவில்லை. அதனால், பல லட்சம் ரூபாய் மோசடி நடந்துள்ளதாக தெரிகிறது.

பல புத்தக கட்டுகள் பிரிக்கப்படாமல் இருந்தன. அந்த புத்தகங்களையும் பிரித்து பார்த்தால், கோடி ரூபாய்க்கு மேல் ஊழல் நடந்துள்ளதாக தெரிகிறது.

இந்த ஊழலில் சம்பந்தப்பட்டவர்கள் யார்; வினியோகம் செய்தவர்கள் யார்; இதற்கு ஆணை கொடுத்தவர் யார்; அந்த பதிப்பக உரிமையாளர்கள் யார் என்பதை எல்லாம் கண்டறிந்து, தமிழக அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

பெருமை தேடியது


இந்த சூழலில், சென்னை கலைவாணர் அரங்கில் நேற்று நடந்த நிகழ்ச்சியில், அமைச்சர் ராஜ்மோகன் பேசியதாவது: கோவையில், ஈ.வெ.ரா., அறிவுலகம் திறந்து வைக்கப்பட்டது. உடனே, எதிர்க்கட்சியான தி.மு.க., 'அதை நாங்கள் தான் கட்டினோம்' என, பெருமை தேடியது. உங்கள் வீட்டு பணத்திலா நுாலகம் அமைக்கப்பட்டது... மக்கள் வரிப் பணத்தில் நுாலகம் அமைக்கப்பட்டது. அதனால், மக்களால் தேர்வு செய்யப்பட்ட முதல்வர், அந்த நுாலகத்தை திறந்து வைத்தார்.

தற்போது, எழுத்தாளர் பெருமாள் முருகன், கட்டுரை ஒன்றை எழுதி உள்ளார். அதில், ஈ.வெ.ரா., நுாலகத்தில் ஊழல் நடந்திருப்பதாக தெரிவித்துள்ளார். இப்போது தானே திறந்து வைத்தோம்... அதற்குள் ஊழலா... நமக்கு தெரியாமல் நடந்து விட்டதா... அதிகாரிகள் ஏதேனும் தவறு செய்து விட்டனரா என நினைத்தோம்.

அந்த கட்டுரையை பார்க்கும்போது, வேதனையாகவும் ஒருபுறம் சிரிப்பாகவும் இருந்தது. கட்டுரையில் தெரிவிக்கப்பட்ட எழுத்தாளர்கள் பெயர்களை எல்லாம், நான் என் வாழ்க்கையிலேயே கேள்விப்பட்டது கிடையாது. அதில் ஒரு பதிப்பகத்தில், 1,800 நுால்களை வாங்கி உள்ளனர். அப்படி ஒரு பதிப்பகம், செவ்வாய் கிரகத்திலேயே இல்லை.

புகைப்படங்கள்


இதைப் பார்க்கும்போது ஆச்சரியமாக உள்ளது. ஈ.வெ.ரா., நுாலகத்தில் நடந்துள்ள ஊழல், கடந்த தி.மு.க., ஆட்சியில் நடந்த ஒரு மெகா ஊழலின் எடுத்துக்காட்டு. ஈ.வெ.ரா., பெயரில் ஊழல் செய்துள்ளனர்.

சிவகங்கை மாவட்டம் கீழடியில் நடந்த அகழாய்வு குறித்து, ஒரு நுால் கொள்முதல் செய்துள்ளனர். அந்த நுாலில், கீழடி புகைப்படங்கள் என, கூகுளில் இருந்த எடுத்த படங்களை வைத்துள்ளனர். அந்த புத்தகத்தை யார் எழுதியது என்பதே தெரியவில்லை. எழுதியவரே தன்னை ஒரு தொல்லியல் ஆய்வாளராக கருதி, அந்த புத்தகத்தை எழுதி உள்ளார். புத்தகத்தில் உள்ளதை போன்ற நந்தி சிலை, கீழடியில் இருந்து எடுக்கப்படவில்லை.

மேலும், 'பாரதியாரின் கதைகள்' என, ஒரு புத்தகத்தை வாங்கியுள்ளனர். இதை விட பள்ளி மாணவர்கள் சிறப்பாக கதைகளை எழுதி இருப்பர். இப்படி அனைத்திலும் ஊழல் செய்துள்ளனர்.

இந்த ஈ.வெ.ரா., நுாலக ஊழல் குறித்து விசாரணை தொடங்கப்பட்டு உள்ளது. இதில் யாரெல்லாம் சம்பந்தப்பட்டு உள்ளனோ, அவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்; நீதி நிலைநாட்டப்படும். இவ்வாறு அவர் பேசினார்.

'அத்தனை நுால்களையும் உடனடியாக எரிக்க வேண்டும்'



* பா.ம.க., தலைவர் அன்புமணி: கோவையில் தி.மு.க., ஆட்சியில் அமைக்கப்பட்டு, கடந்த அக்., 16ல் திறக்கப்பட்ட ஈ.வெ.ரா நுாலகத்திற்கு, நுால்கள் வாங்கியதில் ஊழல்கள் நடந்திருப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. கல்வி, நுாலகம் சார்ந்த விஷயங்களிலும், அறிவை வளர்க்கும் நுால்களை வாங்குவதிலும் ஊழல் செய்வதை மன்னிக்கவே முடியாது.

இது தொடர்பான அனைத்து உண்மைகளும் வெளிக்கொண்டு வரப்பட வேண்டும். இதன் பின்னணியில் உள்ள அனைவரும் தண்டிக்கப்பட வேண்டும். ஊழலின் பின்னணி குறித்த உண்மைகளை வெளிக்கொண்டு வருவதற்காக, ஆணையம் அமைக்க வேண்டும்.

* 'வீ தி லீடர்ஸ்' நிறுவனர் அண்ணாமலை: நுாலகத்திற்காக ஒதுக்கப்படும் மக்கள் வரிப்பணத்தில், முறைகேடு நடந்திருப்பது, ஒரு நிதி முறைகேடு மட்டுமல்ல; அடுத்த தலைமுறையின் கல்வி மற்றும் அறிவு வளர்ச்சிக்கு செய்யப்படும் துரோகம்.

இந்த விவகாரம் தொடர்பாக, முழுமையான விசாரணை நடத்தப்பட வேண்டும். அறிவைப் பகிர வேண்டிய நூலகத்தையே, ஊழலுக்கான கூடாரமாக மாற்றியிருந்தால், அது வெறும் மக்கள் வரிப்பணக் கொள்ளை அல்ல, அறிவுக் கொள்ளை. இதற்குப் பொறுப்பானவர்கள் யாராக இருந்தாலும், சட்டத்தின் முன் நிச்சயமாக நிறுத்தப்பட வேண்டும்.

நுால்களை எரிக்க வேண்டும்



* எழுத்தாளர் ஜெயமோகன்: கோவை நுாலகம் எப்படிப்பட்ட மோசடியை நிகழ்த்தியுள்ளது என்று, பெருமாள் முருகனின் கட்டுரை காட்டுகிறது. பல கோடி ரூபாய்க்கு நுால்களை வாங்கி, அடுக்கி உள்ளனர். அத்தனையும் செயற்கை நுண்ணறிவு எனும் ஏ.ஐ., வைத்து உருவாக்கப்பட்ட போலி நுால்கள். முழுக்க முழுக்க பிழையானவை. தகவல்களில் பிழை அல்ல; அத்தனை வரியும், செய்திகளும் பிழைகள்.

தமிழகத்தின் முதல்வராக கூட, கற்பனை பெயர்கள் அளிக்கப்பட்டுள்ளன. அத்தனை நுால்ளையும் உடனடியாக எரிக்க வேண்டும். அள்ளி வெளியே போடுவதே ஆபத்தானது. ஏனென்றால், இவை பழைய நுால்களாக உலவினால்கூட அறிவுக்கு மிகப்பெரிய சிக்கல்கள் உருவாகும்.

* மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்: தமிழுக்கு இதை விட பெரிய அவமானம் இல்லை. இத்தகைய போலியான நுால்கள் நீண்ட கால அடிப்படையில், மாபெரும் தீங்குகளை விளைவிக்கும். இவற்றை வாசித்து குறிப்பெடுத்து, அவை பேச்சிலும் எழுத்திலும் ஆய்விலும் இடம்பெற்றால், தமிழின் மானம் கப்பலேறிவிடும். இந்த காரியத்தை எவர் செய்திருந்தாலும், அவர்கள் தமிழுக்கு துரோகம் இழைத்தவர்கள். இந்த போலி நுால்கள் உடனே திரும்ப பெறப்பட வேண்டும்.

* தமிழக காங்கிரஸ் தலைவர் மாணிக்கம் தாகூர்: சிவகங்கை மாவட்டம், கீழடி அகழாய்வில் நந்தி கண்டறியப்பட்டதாக, படத்துடன் ஒரு புத்தகம் உள்ளது. பாரதியாரின் எழுத்துகள் போல போலியாக எழுதப்பட்ட நுாலும் உள்ளது. இதுகுறித்து, தமிழக அரசு விரிவான விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்.

* மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலர் பெ.சண்முகம்: தமிழ் அறிஞர்கள் உள்ளடக்கிய ஒரு குழுவை அமைக்க வேண்டும். நுாலகத்தில் இடம்பெற்றுள்ள நுால்கள் அனைத்தையும் ஆராய்ந்து, போலியானவை என உறுதிப்படுத்தப்படும் நுால்களை உடனே நீக்க வேண்டும். சிறப்பு புலன் விசாரணைக் குழு ஒன்றை அமைத்து, முறைகேடுகள், மோசடிகளை கண்டறிந்து, அவற்றிற்கு காரணமான அனைவர் மீதும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

* நா.த.க., ஒருங்கிணைப்பாளர் சீமான்: பொழுதுபோக்குக்கு முக்கியத்துவம் கொடுத்து, அதிகாலை ஆறு மணிக்கே திரையரங்குகளைத் திறக்க ஏற்பாடு செய்கிறது த.வெ.க., அரசு. மற்றொரு பக்கம், அறிவுக் கண்ணைத் திறக்க வேண்டிய நுாலகத்தில், புத்தகங்களிலேயே ஊழல் நடந்து இருப்பதாக குற்றச்சாட்டுகள் எழுமளவுக்கு நிர்வாகம் செய்கிறது. மக்களைப் பொழுதுபோக்கில் மூழ்கடித்து விட்டு, அவர்களின் அறிவுத் தேடலையும் மோசடி பேர்வழிகளிடம் ஒப்படைக்க முனைவது பெரும் அவலம் இல்லையா?

முந்தைய தி.மு.க., ஆட்சியில் தொடங்கபட்ட திட்டம் என்பதைக் கூறி, இன்றைய அரசு தன்னுடையப் பொறுப்பிலிருந்து விலக முடியாது. அதேபோல், திட்டத்தை உருவாக்கிய பெருமையை உரிமை கோரும், தி.மு.க.,வும், கொள்முதல் குறித்து கேள்விகளுக்கு விளக்கம் அளிக்க வேண்டும்.

* அ.ம.மு.க., பொதுச்செயலர் தினகரன்: இல்லாத பதிப்பகத்தில் நூல்கள் கொள்முதல் செய்யப்பட்டது எப்படி; அதற்கான ஆணையை பிறப்பித்தது யார்; நுால்களை பரிசோதித்து அங்கீகாரம் வழங்கியது யார் என்பதில் தொடங்கி பணப் பரிவர்த்தனை வரை, ஒவ்வொருவரையும் விசாரிக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறியுள்ளனர்.

குற்றச்சாட்டுக்கு தி.மு.க., பதில் அறிக்கை


'த.வெ.க., ஆட்சியில் யாருக்கு கமிஷன் போனது? கடந்த ஆட்சியில் நுாலகங்களுக்கு புத்தகங்கள் வாங்குவதில், எந்தவிதமான ஒளிவு மறைவுமின்றி, வெளிப்படையான முறையில் புத்தகங்கள் கொள்முதல் செய்யப்பட்டதை பதிப்பாளர்களே அறிவர்' என, தி.மு.க., தலைமை அறிவித்துள்ளது.
தி.மு.க., தலைமை அறிக்கை: ஈ.வெ.ரா., நுாலகத்தில் அகல் விளக்கு மற்றும் பீனிக்ஸ் பதிப்பகத்தின் போலியான நுால்களில் மட்டும், ஜூன் மாதம் என முத்திரை இடப்பட்டுள்ளதாக அங்கிருப்பவர்கள் தெரிவிக்கின்றனர். அந்த தேதி கூட முதல்வருக்கு பிறந்த நாள் தான். அதே ஈ.வெ.ரா., நுாலகத்தில் உள்ள, 'வால்காவில் இருந்து கங்கை வரை' போன்ற புகழ்பெற்ற மற்ற பதிப்பக நுால்கள், தி.மு.க., ஆட்சியின் மார்ச் மாத முத்திரையோடு உள்ளன. அப்படியென்றால், போலி பதிப்பக புத்தகங்கள் எப்போது வாங்கப்பட்டன; யார் முடிவு எடுத்தது?
த.வெ.க., ஆட்சியில் யாருக்கு கமிஷன் போனது; கடந்த ஆட்சியில் நுாலகங்களுக்கு புத்தகங்கள் வாங்குவதில், எந்தவிதமான ஒளிவு மறைவுமின்றி, வெளிப்படையான முறையில் புத்தகங்கள் கொள்முதல் செய்யப்பட்டன என்பதை பதிப்பாளர்களே அறிவர்.
தி.மு.க., ஆட்சியில் புத்தக தேர்வுக் குழுவில் இருந்த எழுத்தாளர் ஒருவர், த.வெ.க., ஆட்சியமைந்த ஆறு மாதங்களுக்கு பின், நுாலகத்தில் உள்ள புத்தகங்களின் பெயர்களையும், திரிஷா விஜய், விஜய் பாலு, விஜய் செல்வம், விஜய் ஆதித்தன், சுமேகா விஜய் என்ற 'எழுத்தாளர்களின்' பெயர்களையும் பார்த்து பதறிய பின் தான் அரசுக்கு தெரிந்ததா அல்லது எந்த விபரமும் தெரியாமல் தான் அறிக்கை விட்டு இருக்கிறாரா?. இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.



சம்பந்தமே இல்லாத நுால்கள் சட்டவிரோத கொள்முதல்


ஈ.வெ.ரா., நுாலகத்திற்கு சம்பந்தமே இல்லாத நுால்களை எல்லாம், எந்தவித விதிகளையும் பின்பற்றாமல், கொள்முதல் செய்துள்ளனர். இதில், மிகப்பெரிய ஊழல் நடந்திருப்பதாக, எழுத்தாளர் பெருமாள் முருகன் சுட்டிக்காட்டி இருக்கிறார். உடனடியாக விசாரிக்கப்பட்டதில், கடந்த ஆட்சியில் இது நடந்திருப்பது தெரியவந்துள்ளது.
பொது நுாலக இயக்குநரின் செயல்முறைகளின்படி, எந்த புத்தகத்துக்கு எவ்வளவு விலை வைக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பணிகள், கடந்த ஆண்டு நவம்பர் மாதமே தொடங்கி விட்டது. பல லட்சம் ரூபாய் மதிப்பிலான புத்தகங்களை வாங்கி உள்ளனர். இதுகுறித்து விசாரணை நடத்த திட்டமிட்டுள்ளோம். ஈ.வெ.ரா., பெயரில் ஊழல் நடந்திருப்பது கண்டிக்கத்தக்கது.
யார் அதிக நுாலகம் கட்டினர் என்பது முக்கியம் கிடையாது. யார் வெளிப்படையான நிர்வாகத்தை வழங்குகின்றனர் என்பதே முக்கியம். இந்த விஷயத்தில், தவறு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தி உள்ளோம். இன்னும், பல நுாலகங்கள் திறக்கப்பட உள்ளன. அதிலும் ஏதாவது முறைகேடு நடந்திருக்கிறதா என்பது குறித்து விசாரணை நடத்தப்படும்.
- அமைச்சர் ராஜ்மோகன்.

Image 1641785

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us