அட்டை கத்தியாக மாறிய பசுமை கமிட்டிகள் அனுமதியின்றி மரங்களை வெட்டும் அரசு துறைகள்
அட்டை கத்தியாக மாறிய பசுமை கமிட்டிகள் அனுமதியின்றி மரங்களை வெட்டும் அரசு துறைகள்
ADDED : அக் 10, 2024 08:50 PM
சென்னை:மாவட்ட அளவில் அமைக்கப்பட்ட பசுமை கமிட்டியின் அனுமதி பெறாமல், பல்வேறு அரசு துறைகள் தன்னிச்சையாக மரங்களை வெட்டுவதாக, வனத்துறை அதிகாரிகள் புகார் தெரிவித்து உள்ளனர்.
தமிழகத்தில் பசுமை பரப்பை 33 சதவீதமாக அதிகரிக்க, அரசு இலக்கு நிர்ணயித்துஉள்ளது.
இதற்காக, 'பசுமை தமிழகம்' இயக்கம் துவக்கப்பட்டு, மரம் வளர்ப்பு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.
வரைவு திட்டம்
இவற்றில், ஒரு முக்கிய முன்னேற்றமாக, மாவட்ட அளவிலான பசுமை கமிட்டிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
ஒவ்வொரு மாவட்டத்திலும் கலெக்டர் தலைமையிலான இந்த கமிட்டியில், மாவட்ட வன அலுவலர், உள்ளாட்சி, பொதுப்பணி, நெடுஞ்சாலை துறை அதிகாரிகள், தன்னார்வலர்கள் என, பல்வேறு தரப்பினர் உறுப்பினர்களாக சேர்க்கப்பட்டு உள்ளனர்.
பொது இடங்களில் உள்ள மரங்களை, அரசின் கட்டுமான திட்டங்களுக்காக அகற்ற வேண்டும் என்றால், அது குறித்த வரைவு திட்டத்தை, இந்த கமிட்டியிடம் தாக்கல் செய்ய வேண்டும். இந்த கமிட்டி ஆராய்ந்து, மரம் வெட்டுவதற்கு அனுமதி வழங்குவது குறித்து முடிவு எடுக்கும்.
தமிழக அரசின் உத்தரவுப்படி, ஒவ்வொரு மாதமும் கலெக்டர்கள் தலைமையில், பசுமை கமிட்டியின் கூட்டம் நடத்தப்படுகிறது. இதில், மரம் வெட்டுவதற்கான அனுமதி கோரும் விண்ணப்பங்கள் மீது விசாரணை நடக்கிறது.
மதிப்பதில்லை
ஆனால், கடந்த சில மாதங்களாக, பல்வேறு மாவட்டங்களில் இந்த கமிட்டியிடம் அனுமதி கேட்காமல், அரசு துறையினர் மரங்களை வெட்டுவது தொடர்கிறது.
இது குறித்து, வனத்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:
பசுமை கமிட்டிகளை பிற துறைகள் மதிப்பதே இல்லை. பசுமை கமிட்டி அனுமதியின்றி மரம் வெட்டக்கூடாது என, அனைத்து அரசு துறைகளுக்கும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், மாநகராட்சிகள், நகராட்சிகள், நெடுஞ்சாலை துறை ஆகியவை தன்னிச்சையாக மரங்களை வெட்டுகின்றன.
இது குறித்து, யாராவது புகார் அளித்தால் மட்டுமே, வனத்துறையால் அது குறித்து பசுமை கமிட்டியில் சர்ச்சை எழுப்ப முடிகிறது.
வனத்துறை கவனத்துக்கு வராத நிலையில், அதிக மரங்கள் அரசு துறைகளால் வெட்டப்படுகின்றன. இந்த விதிமீறல் உறுதியாகும் நிலையில், சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு, 50,000 ரூபாய் வரை அபராதம் விதிக்கலாம்.
நடவடிக்கை தேவை
ஆனால், பெரும்பாலான மாவட்டங்களில், பிற துறைகள் தன்னிச்சையாக மரங்களை வெட்டுவது குறித்து, தன்னார்வலர்கள், வனத்துறை அதிகாரிகள் புகார் செய்தாலும், கலெக்டர்களும் இதில் கவனம் செலுத்துவதில்லை.
தமிழக அரசு நல்ல நோக்கத்தில் ஏற்படுத்திய பசுமை கமிட்டி அமைப்பு, செயல்படாத அட்டை கத்தியாக மாறி வருகிறது. இதை உறுதிப்படுத்த, தமிழக அரசு சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.

